திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த அலங்கியம் பகுதியைச் சேர்ந்தவர் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவருடன் பழகி வந்துள்ளார். தினமும் பள்ளிக்குச் சென்று வரும் மாணவி வீட்டுக்கு வந்த பிறகு நீண்ட நேரம் தனது தாயின் செல்போனில் நேரம் செலவழித்து வந்துள்ளார். மாணவி செல்போன் பயன்படுத்துவதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இருப்பினும் அந்த மாணவி அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு “செல்போனை எடுக்காதே” என்று பெற்றோர் கடுமையாகக் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி செடிகளுக்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அலங்கியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் உயிரிழந்த மாணவி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்த போது, அதில் குறிப்பிட்ட கல்லூரி மாணவருடன் இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்து காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவியின் தற்கொலைக்கு சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவரே காரணம் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவியின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தாராபுரம்-பழனி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
செல்போன் பயன்படுத்தியதைப் பெற்றோர் கண்டித்ததால் 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us