காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருகாளிமேடு காமராஜர் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சாதிக் என்பவரின் மகள் சமீமா(18). பிளஸ் டூ முடித்துவிட்டு இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி, அதில் 502 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகின்ற 30-ஆம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில், இரண்டு நாட்களில் சமீமாவிற்கு கவுன்சிலிங் அழைப்பு வர வாய்ப்பு உள்ள நிலையில், தனக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற பயத்தில், வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமீமாவின் உடலை காவல்துறைக்குத் தெரியாமல் மறைக்க உறவினர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால், தகவல் கிடைத்ததன் பேரில், தாலுகா காவல்துறையினர் சமீமாவின் உடலை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சமீமா, தனக்கு மருத்துவக் கல்லூரியில் இலவச இடம் கிடைக்காதோ என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்திற்கு அரசு என்ன செய்யப்போகிறது என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.