Advertisment

காதலைக் கண்டித்த ஏ.என்.ஜே.ஏ. கல்லூரி நிர்வாகம்; விபரீத முடிவெடுத்த மாணவி!

anja

Student lost her lives for ANJA College administration condemns love

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிசிஏ பயின்று வந்த மாணவி சோலை ராணி (19), வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சிவகாசி ஆசாரி காலனி பகுதியைச் சேர்ந்த அவர், தந்தை இல்லாத நிலையில் தாயுடன் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த இரவு, அவரது தாய் மருத்துவமனையில் பணியில் இருந்த நேரத்தில், மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவாகியுள்ளது. மாணவி மரணம் தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கல்லூரியில் ஏற்பட்ட காதல் தொடர்பான பிரச்சனையே இந்த துயர சம்பவத்திற்கு பின்னணி காரணமாக இருக்கலாம்  என்பது தெரிய வந்துள்ளது.

Advertisment

அதே கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவர் ஒருவருடன் மாணவி பழகியதாகவும், இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மாணவர்கள் தரப்பில் கூறுகின்றனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து, மாணவியை கல்லூரி முதல்வர் அறை முன்பாக நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாகவும், கடுமையாக கண்டித்ததாகவும், ‘இனி இப்படிச் செய்ய மாட்டேன்’ என எழுதப்பட்ட மன்னிப்பு கடிதம் ஒன்றை மாணவியிடமிருந்து பெற்றுக்கொண்டு, வீட்டிற்கு அனுப்பியதாகவும் கூறுகின்றனர். கல்லூரியிலிருந்து செல்லும்போது, ‘என் பெயரை எழுதி வைத்தே சாவேன்’ என மாணவி வெளிப்படையாக கூறியதாகவும், அதன்பின் சில மணி நேரங்களுக்குள் அவர் உயிரிழந்ததாகவும், சம்பவம் நடந்த நேரம், இரவு 8 மணி முதல் 8.15 மணிக்குள் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் அசோக்கை தொடர்பு கொண்டு பேசினோம். மாணவியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், சமூக வலைத்தளங்களில் மாணவி வைத்திருந்த புகைப்பட ஸ்டேட்டஸ் மூலமாக இந்த விஷயம் தனக்கு தெரிய வந்ததாகவும், அதைப் பார்த்தவுடன் மாணவியின் தாயை தொடர்புகொண்டு பேசியதாகவும், இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கி வீட்டிற்கு அனுப்பியதாகவும் அவர் கூறினார். மாணவி இவ்வளவு பெரிய முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை என்றும், மாணவியை வெளியே நிற்க வைத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுவது உண்மை அல்ல என்றும் கல்லூரி முதல்வர் நம்மிடம் மறுத்தார்.

கல்லூரி நிர்வாகத்தின் கண்டிப்பும், காதல் விவகாரங்களை குற்றமாக பார்க்கும் அணுகுமுறையும், மென்மையான மனநிலையிலுள்ள மாணவிகளுக்கு கடும் உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதையே இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஒரு மாணவியின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயத்தில், ஆலோசனையும் பாதுகாப்பும் வழங்க வேண்டிய கல்லூரி நிர்வாகம், கண்டிப்பு மற்றும் அவமானம் போன்ற வழிமுறைகளை பின்பற்றுவது எந்த அளவுக்கு ஆபத்தானது என்ற கேள்வி இந்த விவகாரத்தில் எழுந்துள்ளது. மாணவி எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதம், அவரது கைபேசி மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் சிவகாசி டவுன் காவல் நிலைய எல்லைக்குள் நடந்துள்ளது. வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடர்வதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

anjau

இதனிடையே, மாணவி தற்கொலைக்கு கல்லூரி நிர்வாக தவறே காரணம் என்று இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. 

college student Sivakasi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe