கல்லூரி பேராசிரியரால் நீண்ட காலமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாதானக் கூறி கல்லூரி வளாகத்திலேயே 20 வயது பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், பாலசோர் பகுதியில் ஃபாகிர் மோகன் என்ற தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், 20 வயது மாணவி ஒருவர் பி.எட் படித்து வந்துள்ளார். இவரை பி.எட் துறைத் தலைவரும் பேராசிரியருமான சமீர் குமார் சாஹு என்பவர் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் கல்வியில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மாணவியை மிரட்டியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட மாணவி கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இது குறுத்து கல்லூரி முதல்வர் மற்றும் காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார். ஆனால், பேராசிரியர் மீது யாரும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கல்லூரி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்ட போதிலும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், மாணவி பல வாரங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி கல்லூரி முதல்வரை சந்தித்து மீண்டும் புகார் அளித்துள்ளார். கல்லூரி முதல்வரை சந்தித்துவிட்டு வெளியே வந்த மாணவி சிறிது நேரத்திலேயே, தன் மீது தீயை பற்ற வைத்து தீக்குளித்தார்.

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்து அந்த மாணவியை மீட்டனர். 90 சதவீத தீக்காயங்களுடன் உயிர் தப்பிய மாணவி, புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அந்த மாணவி நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக, கல்லூரி முதல்வர் திலிப் குமார் கோஷ் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment

பாலியல் துன்புறுத்தல் குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒடிசாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சம்பவம் அமமாநில அரசியலில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.