ஈரான் நாட்டின் ரியால் நாணயத்தின் மதிப்பு பெருமளவில் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அந்நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அத்தியாவசிய பொருட்களான இறைச்சி, அரிசி போன்ற பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வருடாந்திர பணவீக்கத்தின் விகிதம் சுமார் 40 சதவீதமாக மாறி இருப்பதால், மக்களின் அன்றாட வாழ்க்கை செலவுக்கான பணத்தின் மதிப்பும் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் அந்நாட்டு அரசு, மக்களுக்கு வழங்கும் முக்கியமான மானிய எரிபொருள் விலையை உயர்த்தியது.
மேலும் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் விலையை மறுபரிசீலனை செய்யும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதோடு, மருந்து மற்றும் கோதுமையைத் தவிர பிற பொருள்களுக்கு டாலர்-ரியால் மாற்று விகித சலுகையும் நீக்கப்பட்டது. இதன் விளைவாக, உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து, சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையிலான அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அந்நாட்டில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, ஈரான் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய இந்த போராட்டங்கள், நாட்டின் 31 மாகாணங்களுக்கும் பரவியுள்ளன. மேலும் அரசு கட்டிடங்களுக்கு தீ வைப்பது போன்ற செயல்களில் போராட்டக்காரர்கள் இறங்கியுள்ளனர். மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையும், ராணுவமும் களத்தில் இறங்கி பலரை கைது செய்துள்ளது. கடந்த சில நாட்களில் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கடந்த வியாழக்கிழமை இரவு முழுவதும், அந்நாட்டின் தெஹ்ரான் சாலைகள் போராட்டாக்காரர்களால் நிரம்பி வழிந்தது. மக்கள் எழுச்சிக்கும், போராட்டத்திற்கும் அடிப்படையாக பொருளாதார நெருக்கடி அமைந்துள்ளது.
இத்தகைய பதற்றமான சூழ்நிலை காரணமாக, மக்கள் ஈரானை விட்டு வெளியேறி பிற நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஈரானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், “ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. அவை வன்முறையாக மாறக்கூடும். தெஹ்ரான் இரட்டை குடியுரிமையை அங்கீகரிக்காததால், அமெரிக்க - ஈரானிய குடிமக்கள் ஈரானிய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேற வேண்டும். மேலும் அந்நாட்டு அரசு, அமெரிக்க - ஈரானிய இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களை ஈரானிய குடிமக்களாக மட்டுமே கருதும். இதனால், அமெரிக்க குடிமக்கள் ஈரான் நாட்டின் விசாரணை, கைது மற்றும் தடுப்புக்காவல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க மக்கள் ஈரானை விட்டு வெளியேற வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
மேலும், "ஈரானை விட்டு வெளியேற முடியாதவர்கள், உங்கள் வசிப்பிடம் அல்லது மற்றொரு பாதுகாப்பான வசிப்பிடங்களுக்கு சென்றுவிடுங்கள். அங்கு போதுமான அளவு உணவு, தண்ணீர், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பில் வைத்திருங்கள். ஆர்ப்பாட்டங்கள், கவன ஈர்ப்பு போராட்டங்கள் போன்றவற்றை தவிர்த்துக்கொள்ளுங்கள். மேலும் உங்கள் சுற்றுப்புறங்களில் நடக்கும் சம்பவங்கள் குறித்து எப்போது விழிப்புடன் இருங்கள்” என்ற அறிவுறுத்தல்களையும் அமெரிக்கத் தூதரகம் வழங்கியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/13/iran-pro-2026-01-13-22-10-07.jpg)