ஈரான் நாட்டின் ரியால் நாணயத்தின் மதிப்பு பெருமளவில் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அந்நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அத்தியாவசிய பொருட்களான இறைச்சி, அரிசி போன்ற பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து, சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையிலான அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அந்நாட்டில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, ஈரான் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 

Advertisment

இந்நிலையில் ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனடியாக வெளியேறுமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்திய அரசு ஜனவரி 5, 2025 அன்று வெளியிட்ட ஆலோசனையின் தொடர்ச்சியாகவும், ஈரானில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் (மாணவர்கள், யாத்ரீகர்கள் (பக்தர்கள்), வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்) வணிக விமானங்கள் உட்பட கிடைக்கக்கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் ஈரானை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisment

அனைத்து இந்திய குடிமக்களும், இந்திய தகவல் தொடர்பு அதிகாரிகளும் உரிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும். ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். ஏதேனும் அறிவிப்புகள் குறித்து அறிந்து கொள்ள உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. ஈரானில் உள்ள அனைத்து இந்தியர்களும் தங்கள் பயண மற்றும் குடியேற்ற ஆவணங்கள், பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகள் உட்பட உடனடியாக கையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஏதேனும் உதவிக்கு அவர்கள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

iran-pro

இந்திய தூதரகத்தின் அவசர தொடர்பு உதவி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: மொபைல் எண்கள்: +989128109115; +989128109109; +989128109102; +989932179359. மின்னஞ்சல்: [email protected]. ஈரானில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும், இந்திய தூதரகத்தில் பதிவு செய்யாதவர்கள், இந்த இணைப்பில் (https://www.meaers.com/request/home) பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த இணைப்பு தூதரக வலைத்தளத்திலும் கிடைக்கிறது. ஈரானில் இணையத் தடங்கல்கள் காரணமாக எந்தவொரு இந்தியரும் பதிவு செய்ய முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment