“எங்கள் ஊரோடு, உயிரோடு, வாழ்வோடு கலந்து இருப்பது இந்தி எதிர்ப்பு” - அமைச்சர் துரைமுருகன்

103

மத்திய அரசு தமிழ்நாடு மக்களை இரண்டாம் தர குடிமகனாகவே நினைக்கிறது. மாநிலங்களுக்குத் தர வேண்டிய நிதியை தர மறுக்கிறது என திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் "ஓரணியில் தமிழ்நாடு திமுக பரப்புரை திட்டம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், “ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பு மகத்தான தலைப்பு. இந்த தலைப்பு பல்வேறு கோணங்களை உள்ளடக்கியது. இந்த திட்டத்தின் மூலம் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த வாக்கு சாவடிகளை சார்ந்த மக்களை சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறுவது, உறுப்பினர்கள் சேர்ப்பது திட்டத்தின் நோக்கம். பொதுச் செயலாளராக நானும் இந்த திட்டத்திற்கு மக்களை சந்தித்து பணி செய்வேன். 

திமுக வெறும் அரசியல் கட்சி அல்ல அது சமுதாய போராளி கட்சி. மொழி இனத்தைக் கட்டிக் காக்கின்ற கட்சி. இந்த ஆட்சியை தோற்கடிப்பதற்கு என்னென்ன வழிமுறைகள் எல்லாம் பாசிச பாஜக அரசு செய்கிறது என்பதை மக்களுக்கு தனி தனியாக எடுத்துச் சென்று பொதுக்கூட்டத்தில் கேட்டால் பத்தோடு பதினொன்றாக சென்று விடும் ஆகையால் வீடு வீடாக தனித்தனியாக சென்று திமுக கட்சியின் சாதனைகளை தெரிவிப்போம்.

ஓரணியில் தமிழ்நாடு என்ற ஒரே கொடையில் மக்களை ஒன்றிணைப்பது தான் திமுகவின் இலக்கு. மத்திய அரசு தமிழ்நாடு மக்களை இரண்டாம் தர குடிமகனாகவே நினைக்கிறது. மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறது. உதாரணத்திற்கு கல்விக்கு நிதி தருவது வெள்ள பாதிப்புக்கு நிதி தருவது உள்ளிட்ட பல்வேறு நிதிகளை தர மறுக்கிறது. ஊரோடு, உயிரோடு, ரத்தத்தோடு வாழ்வோடு கலந்து இருப்பது இந்தி எதிர்ப்பு. அந்த இந்தி எதிர்ப்பை நாங்கள் எதிர்க்க பல மாநிலங்களில் இந்திய எதிர்ப்பு உருவாகிக் கொண்டிருக்கிறது பீகாரில் கூட ஹிந்தி இப்போது எதிர்க்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார். 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார் என்ற கேள்விக்கு, பதில் அளிக்க அமைச்சர் துரைமுருகன், “அவர் எதிர்க்கட்சி தலைவர் அவர் அப்படித்தான் பேசுவார். நல்ல ஆட்சியை கூட நல்லா இல்லை என்று சொல்வது தான் எதிர்க்கட்சியின் உடைய வேலை” என்றார்.

திமுக ஒரு நீண்ட நெடிய பழம் பெருமையான கட்சி அந்த கட்சிக்கு இப்போது ஒரு அணியில் தமிழ்நாடு என்பது அவசியமா? என்ற கேள்விக்கு, “திமுக நீண்ட பாரம்பரிய கட்சி என்பதால் இதுபோன்ற பொறுப்புள்ள காரியங்களை செய்யத்தான் வேண்டும்” என்றார்.

திமுக அரசு விளம்பர அரசியல் செய்து மக்களை ஏமாற்றுகிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன் " எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்” என்றார்.

கூமாபட்டி பிளவுக்கள் அணையில் பூங்க அமைப்பதற்கு 10 கோடி நிதி ஒதுக்கி அது கிடப்பில் போடப்பட்டிருக்கிறது என்று கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன் " எல்லா இடங்களிலும் பூங்க அமைத்திட முடியாது நிலங்கள் சரியாக இருப்பதில்லை ஆனால் அந்த அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன்” என்றார்.

மேட்டூர் டேம் திறக்கப்பட்ட நிலையில் கடை மடங்கைக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை என்று குற்றச்சாட்டு இருக்கிறது என்று கேள்விக்கு, “திறந்த உடனே எப்படி வரும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செல்லும். இது நாள் வரையில் இந்த அளவுக்கு தண்ணீர் திறந்தது கிடையாது இப்போது திறந்து இருக்கிறோம்” என்று பதிலளித்தார். இறுதியாக பா.ம.க குறித்து கேள்வி கேட்டதற்கு பா.ம.க கட்சி சமாச்சாரங்கள் நமக்கு தேவையில்லை என்று பதில் அளித்தார்

dmk b.j.p duraimurgan Hindi imposition
இதையும் படியுங்கள்
Subscribe