struggle intensifies at Annamalai University for Negotiations fail
பல்கலைக்கழக ஊழியரிடம் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் தோல்வி அடைந்ததால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள், பண பயன்கள், ஓய்வூதியத் தொகை, தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளதால் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று மாலை பல்கலைக்கழகத்தில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இனிமேல் பல்கலைக்கழகத்தை திறக்காமல் பணிக்கு கையெழுத்திடாமல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.
போராட்டத்திற்கு மாணவர்களும் ஆதரவு தெரிவித்து இணைந்து போராட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் போராட்டத்தின் வடிவங்கள் மாற்றப்படும் அறிவித்துள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow Us