struggle in the Delhi broke out in the middle of the night
சேவ் இந்தியா ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு, டெல்லியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதன் அடிப்படையில் துர்க்மான் கேட் அருகே உள்ள ராம்லீலா மைதானத்தில் 38,940 சதுர அடி ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சிக்கும் பொதுப்பணித் துறைக்கும் உயர் நீதிமன்றம் மூன்று மாத கால அவகாசம் வழங்கியது. அதன்படி, பழைய டெல்லியின் துர்க்மான் கேட் பகுதியில் உள்ள ஃபைஸ்-இ-இலாஹி மசூதிக்கு அருகில் உள்ள பகுதிகளை இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது.
இதற்கிடையில், மஸ்ஜித் சையத் இலாஹி மசூதியின் நிர்வாகக் குழு, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு எதிராக மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘சம்பந்தப்பட்ட சொத்து தங்களால் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கான குத்தகை வாடகையை வக்பு வாரியத்திற்குச் செலுத்தி வருவதாகவும், அதனால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி அந்த உத்தரவை நிறுத்தி வைத்து நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், நோட்டீஸ் அனுப்பி இருந்த போதிலும் இடிப்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்படாமல், தொடர்ந்து நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை நிறுத்தக் கோரி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, மக்கள் தடுப்புகளை மீற முயன்றதோடு காவல்துறையினர் மீது கற்களை வீசியதால், அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பதற்றத்தைத் தணிப்பதற்காகக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, கூட்டத்தைக் கலைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. முதல் தகவல் அறிக்கையின்படி, பிஎன்எஸ் சட்டத்தின் 221, 132, 121, 191(2), 191(3), 223(ஏ) மற்றும் 3(5) ஆகிய பிரிவுகளின் கீழும், 1984 ஆம் ஆண்டு பிடிபிபி சட்டத்தின் பிரிவு 3-இன் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்திய பிறகு ஐந்து பேர் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களின் ஈடுபாடு சிசிடிவி மற்றும் செல்போன் காட்சிகளைக் கொண்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது.
Follow Us