பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காததால் கல்லூரி வளாகத்திலேயே 20 வயது பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ஒடிசா மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், பால்சோர் பகுதியில் ஃபாகிர் மோகன் என்ற தனியார் கல்லூரியில் பணிபுரியும் பி.எட் துறைத் தலைவரும் பேராசிரியருமான சமீர் குமார் சாஹு என்பவர், அந்த கல்லூரியில் பி.எட் படித்து வந்த 20 வயது மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கல்லூரி முதல்வர், காவல்துறையினரிடம் மாணவி புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்லூரி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்ட போதிலும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், மாணவி பல வாரங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி கல்லூரி முதல்வரை சந்தித்து மீண்டும் புகார் அளித்துள்ளார். கல்லூரி முதல்வரை சந்தித்துவிட்டு வெளியே வந்த மாணவி சிறிது நேரத்திலேயே, தன் மீது தீயை பற்ற வைத்து தீக்குளித்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு, புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 90 சதவீத காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அவர், கடந்த 14ஆம் தேதி இரவு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக, கல்லூரி முதல்வர் திலிப் குமார் கோஷ் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒடிசாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வரில் இன்று (16-07-25) காலை மாநில சட்டமன்றம் மற்றும் செயலகத்திற்கு வெளியே பெரிய போராட்டம் நடத்தினர். இதற்காக போலீசார் அங்கு விரைந்து தடுப்பு வேலியை போட்டனர். போராட்டக்காரர்கள் தடுப்பு வேலியை உடைக்க முயற்சி செய்தனர். அவர்களை கலைக்க காவல்துறையினர் தண்ணீர் பாய்ச்சினர். மேலும், அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளை வீசி அவர்களை கலைக்க முயற்சி செய்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே, தன் மகள் தற்கொலை செய்யவில்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘இது என் மகளுக்கு எதிரான சதி. கல்லூரியில் அவள் எப்போதும் குரல் எழுப்பினாள், அதனால் அவர்கள் அவளை குறிவைத்தார்கள். எல்லோரும் அவளை இறக்க கட்டாயப்படுத்தினர். இது கொலை இல்லையா? தற்கொலைக்கு முயற்சிக்க கட்டாயப்படுத்தினர். கல்லூரி முதல்வரின் அறையில் சந்திக்க ஏன் அவளை தனியாக அழைத்தார்கள்? அந்த அறைக்குள் என்ன நடந்தது? எங்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை?. என் மகள் முழுமையாக மனம் திறக்கவில்லை, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறினார். அவர் என்னிடம், ‘நான் அவளுடைய ஆசிரியர், கவலைப்படாதே’ என்று கூட கூறினார். இதற்கு உள் குழு உறுப்பினர்கள்தான் பொறுப்பு. குற்றம் சாட்டப்பட்டவரின் முன்னிலையில் அவர்கள் என் மகளை திட்டினர். குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர், முதல்வர் மற்றும் உள் குழுவின் பங்கு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் " என்று அவர் கூறினார்.