வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக வெடித்த போராட்டத்தின் காரணமாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், வங்கதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றார். இதனிடையே, கடந்தாண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை மனித குலத்திற்கு எதிரானது என இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பங்களாதேஷ் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அவரை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசுக்கு வங்கதேச இடைக்கால அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், அந்த கோரிக்கையை இந்தியா மறுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.அதே சமயத்தில், அந்நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் இந்து மக்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு மதக்கலவரம் நடந்து வருகிறது.
பரபரப்பான சூழலுக்கு மத்தியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர் அமைப்பு தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு மேலும் பதற்றம் ஏற்பட்டு கலவரம் நீடித்து வருகிறது. போராட்டக்காரர்கள், பத்திரிகை அலுவலங்கள் மீது தீ வைத்து எரித்தது மட்டுமல்லாமல், அங்குள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அந்நாட்டில் ஏற்பட்டு வரும் வன்முறை சம்பவங்களில் ஒரு பகுதியாக, தீபுசந்திர தாஸ் என்ற இந்து இளைஞரை, கொடூரமாகத் தாக்கி கொலை செய்து நடு வீதியில் தீயிட்டு கொழுத்தினர். இதனால், அங்கு கலவரம் ஏற்பட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்து இளைஞரை கொடூரமாகத் தாக்கி தீயிட்டு கொழுத்திய சம்பவத்திற்கு இந்தியாவில் உள்ள பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் உள்ள வங்கதேசம் அலுவலகம் முன்பு விஸ்வ இந்து பரிஷத் என்ற இந்து அமைப்பினர் இன்று (23-12-25) போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகள் போடப்பட்டது. அப்போது போலீசாரின் தடுப்புகளை உடைத்து வங்கதேச தூதரக அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். இதனால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/23/delhiban-2025-12-23-13-07-37.jpg)