தொடங்கப்பட்ட ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளுக்குள் சிக்கி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழகத்தில் மட்டுமல்லாது மற்ற மொழிகளில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக போர்க்கொடிகள் எழுந்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழகத்தில் குறிப்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இதுகுறித்து ஏற்கனவே அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'தமிழர் பண்பாடு என்பது, நெஞ்சில் நாணம், வாழ்வில் ஒழுக்கம், நாவிலே நெறி என்று, பன்னெடுங்காலமாக வடிவெடுத்த ஒரு நாகரிகச் செல்வம். அந்த மகத்தான செல்வத்தை, இன்று ‘பொழுதுபோக்கு’ என்றப் பெயரில் அழிக்க முயலும் ஒரு வணிகப் பாம்பு தான், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழர் மரபையும் மதிப்பையும் கேலி செய்து, சீரழிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய சமூகச் சீரழிவு. தமிழர் பண்பாட்டையும், குடும்ப அமைப்பையும் குலைக்கும் நச்சு நிகழ்ச்சி இது.பிக் பாஸ் நிகழ்ச்சியின் தினசரி அத்தியாயங்கள் சண்டை, குரோதம், ஆபாசம், பொய், துரோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளின் களமாகவே இருக்கின்றன. இவை எதுவுமே தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய அடையாளங்கள் அல்ல. தமிழர் குடும்பம் என்பது 'அன்பு, அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல்' ஆகிய விழுமியங்களுடன் வாழும் ஓர் உன்னதமான அமைப்பு.

Advertisment

074
struggle against Tamil Bigg Boss show - Police deployed Photograph: (bigboss)

ஆனால், இந்த நிகழ்ச்சி இளைஞர்களுக்கு வெறுப்பையும், வன்முறையையும், தனிமனித மோதல்களையும் மட்டுமே வாழும் முறையாகக் கற்றுக்கொடுக்கிறது. இது குடும்ப நல்லிணக்கத்திற்கும், சமூக ஒழுக்கத்திற்கும் எதிரானத் தீவிரமான பண்பாட்டு அச்சுறுத்தல் ஆகும். தமிழ் இனத்தின் தொன்மையை மறக்கடிக்கும் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது' எனக் கூறியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி படமாக்கப்பட்டு வரும் நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சம்பந்த இடத்திற்கே நேரில் சென்று எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அக்கட்சியினர் அந்த பகுதியில் குவித்துள்ளனர். அதேபோல் எந்த அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோர் உள்ளே நுழையாமல் தடுக்கும் வகையில் பேரிக்கார்டுகளை அடுக்கி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.