விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகளும் உயிரிழப்புகளும் அண்மைக் காலமாகத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா எனப் பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, 15 ஆய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு விதிகளை மீறிய தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதிகாரிகளின் நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல், பட்டாசு உற்பத்தியாளர்கள் விருதுநகர் மாவட்டத்தின் எல்லையோரம் ஒட்டியுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் தாலுகாக்களில் உள்ள கிராமங்களில் ஊடுருவி, பட்டாசு ஆலைகளைப் புதிதாக அமைத்து உற்பத்தியைத் தொடங்கியுள்ளனர். காவல்துறை, வருவாய்த் துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை உள்ளிட்ட சில துறைகளின் அதிகாரிகளை வழக்கம்போல கவனித்துவிட்டு, மேலோட்டமாக அனுமதி பெற்று, முழு அளவில் அதிக சக்தி வாய்ந்த பட்டாசுகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 29-ஆம் தேதி, எட்டயபுரம் தாலுகாவில் உள்ள கருப்பூர் கிராமத்தில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில், அதன் உரிமையாளர் கே.வி. கந்தசாமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விதிமீறல்கள், விபத்துகள், உயிரிழப்புகள் ஆகிய மூன்று அம்சங்களும் பட்டாசுத் தொழிலில் பின்னிப் பிணைந்திருப்பதால், இது தூத்துக்குடி மாவட்ட கிராம மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் உருவாக்கியுள்ளது.
மானாவாரி விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் தாலுகாக்களில் பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் கோட்டூர் விலக்குப் பகுதியில், கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வடமலாபுரம் வரதராஜன் தலைமையில், திரளான விவசாயிகளும் கிராம மக்களும் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், “அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடும் பட்டாசு ஆலைகளை அடித்து நொறுக்குவோம்! தூத்துக்குடி மாவட்ட கரிசல் மண்ணிலிருந்து பட்டாசு ஆலைகளை அடித்து விரட்டுவோம்!” என எச்சரிக்கை விடுத்து கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் என்.பி. ராஜகோபால், அதிமுக ஒன்றியச் செயலாளர் தனவதி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்களான தாப்பாத்தி பாண்டி, மாசார்பட்டி அய்யாத்துரை, கருப்பூர் சீனி ராஜகோபால், பொன்னுச்சாமி, ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி