புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள பிசானத்தூர் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க தனியார் நிறுவனம் முயற்சிகள் செய்து வருகிறது. அதாவது புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி உள்பட பல மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில்  மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ள பல மாவட்டங்களிலும் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் கெட்டுப் போனது. குடிநீரில் கழிவுகள் கலந்துள்ளது பலர் உயிரிழந்துள்ளனர் ஆகவே பிசானத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மக்களையும் மண்ணையும் காக்க மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை தொடங்க கூடாது. இதற்கு அரசு துறைகளும் அதிகாரிகளும் அனுமதி அளிக்க கூடாது என்று புகார்கள் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அனுமதி இல்லை என்று அரசு உத்தரவு வரும் வரை பிசானத்தூரில் காத்திருப்பு போராட்டம் செய்வதாக மக்கள் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

Advertisment

இந்த போராட்டத்தையடுத்து அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இந்நிலையில் தான் அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, த.வெ.க உள்பட பல அரசியல் கட்சிகளும் போராட்ட களத்திற்கு சென்று போராட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ போராட்டக்களத்திற்குச் சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தவர் மாவட்ட ஆட்சியர், துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பிசானத்தூரில் மருத்துவக்கழிவு ஆலை வர வேண்டாம் என்று கூறியுள்ளார். மக்கள் எதிர்ப்பை மீறி ஆலை வராது என்ற உத்தரவாதத்தையும் எம்.பி பெற்று மக்களிடம் தெரிவித்துள்ளார். வர்த்தகர்கள் கடையடைப்பு செய்து போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.

ஆனால், ஆலை நிர்வாகம் மீண்டும் மீண்டும் ஆலை அமைக்க அனுமதிக்க விண்ணப்பித்து வருகிறது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் ஆலை வராது என்பதை எழுதிக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டக் களத்தில் உள்ளனர். காத்திருப்பு போராட்டம் தொடங்கி இன்று 50 வது நாள் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கு சென்ற போலீசார் 18 பெண்கள் உட்பட 28 பேரை கைது செய்து போலீஸ் வேன்களில் ஏற்றிச் சென்று கந்தர்வக்கோட்டையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிராம மக்களும் எதிர் கட்சிகளும் போராட்டங்கள் நடத்த ஆலோசித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

Advertisment