தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அவ்வப்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆங்காங்கே பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடந்தேறி வருகின்றன. இந்த நிலையில்தான், கடன் வசூலிக்கச் சென்ற பெண் ஊழியர் ஒருவர் சரமாரியாகத் தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகி, பார்ப்போரைப் பதறவைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அண்ணா நகர் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் பூஜா (26) என்ற பெண் கலெக்ஷன் ஏஜெண்டாகப் பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம்போல் தனது கலெக்ஷன் பணியைப் பார்த்துவந்த பூஜா, வடக்கு நிமிலி கிராமத்தைச் சேர்ந்த தாரணியின் வீட்டிற்குக் கடன் தொகையை வசூலிக்கச் சென்றுள்ளார். ஆனால், தாரணி வெளியே சென்றிருந்ததால், வீட்டில் இருந்த அவரது கணவர் கன்னிக்குமரனிடம் இந்த மாத தவனைத் தொகையான 1,344 ரூபாயை பூஜா கேட்டுள்ளார்.
அதற்கு, தனது மனைவி வெளியே சென்றிருப்பதாகவும், மாலை 4 மணிக்குத் தவணைத் தொகையைத் தருவதாகவும் கன்னிக்குமரன் கூறியுள்ளார். ஆனால், "நான் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு செல்கிறேன்" என்று பூஜா கூறியிருக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மாறி மாறி திட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், பூஜா அங்கிருந்து அலுவலகத்திற்குத் திரும்பியுள்ளார்.
இதற்கிடையே, ஆத்திரமடைந்த தாரணியின் கணவர் கன்னிக்குமரன், தனது நண்பர்களுடன் பூஜாவைப் பின்தொடர்ந்து வந்துள்ளார். பின்னர், அலுவலக நுழைவு வாயிலில் வைத்து பூஜாவை அவதூறாக பேசியதுடன், சரமாரியாகத் தாக்கியும் இருக்கிறார். இதை அறிந்து வெளியே ஓடி வந்த சக ஊழியர்கள் இருவரையும் இடைமறித்து சமாதானம் செய்தனர். இந்தச் சம்பவம் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து கலெக்ஷன் ஏஜெண்ட் பூஜா, திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவணைத் தொகையை வசூலிக்கச் சென்ற பெண் ஊழியரை, இளைஞர் ஒருவர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.