Advertisment

கன்னியாஸ்திரிகள் கைது; கொதிப்பில் மக்கள் - ஓரணியில் கேரளம்!

103

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் மதமாற்றம் செய்வதாகக் கூறி சத்தீஸ்கர் போலீசார் கைது செய்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளான வந்தனா பிரான்சிஸ் மற்றும் பிரீத்தி, ஜூலை 26 அன்று சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளுடன் துர்க் ரயில் நிலையத்தில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, பஜ்ரங் தளம் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் காவல்துறை, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் சத்தீஸ்கர் மத சுதந்திரச் சட்டம், 1968 ஆகியவற்றின் கீழ் ஆள் கடத்தல் மற்றும் மதமாற்ற குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்து, கன்னியாஸ்திரிகளை கைது செய்து துர்க் மாவட்ட சிறையில் அடைத்தது. மேலும், அவர்களுடன் இருந்த மூன்று சிறுமிகள் மீட்கப்பட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Advertisment

இதனிடையே, இந்த மூன்று சிறுமிகளும் நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் கேரளாவில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்வி நிறுவனத்தில் பயில்வதற்காக கன்னியாஸ்திரிகளுடன் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், பஜ்ரங் தள உறுப்பினர்கள், சிறுமிகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காக கன்னியாஸ்திரிகள் அழைத்துச் செல்வதாகக் குற்றம்சாட்டி, ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் கேரளாவில் கிறிஸ்தவ சமூகத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள கிறிஸ்தவ சபைகள் மற்றும் சிறுபான்மை அமைப்புகள் கன்னியாஸ்திரிகளின் கைதை கடுமையாகக் கண்டித்துள்ளன. ஆளும்  கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவையும் இந்த நடவடிக்கையை எதிர்த்து குரல் கொடுத்துள்ளன. சிறுமிகளின் குடும்பத்தினர், நாராயண்பூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள கடிதத்தில், தங்கள் மகள்கள் விருப்பத்துடன் கன்னியாஸ்திரிகளுடன் சென்றதாகவும், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அவர்களை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “இந்த நடவடிக்கை சங் பரிவாரின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்தவ வீடுகளில் கேக்குகளுடனும், புன்னகையுடனும் நுழையும் அதே நபர்கள், இப்போது கன்னியாஸ்திரிகளை வேட்டையாடுகின்றனர். இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்பைக் குலைக்கவும், மதச் சுதந்திரத்தை பறிக்கவும், பிரிவினைவாதத்தை தூண்டவும் இது ஒரு முயற்சியாகும். கைதுக்கு எதிராக பிரதமருக்கு உடனடியாக கடிதம் எழுதினேன், ஆனால் இதுவரை பதில் இல்லை. சிறுபான்மையினரின் உரிமைகளும், அரசியலமைப்பு உத்தரவாதங்களும் அச்சுறுத்தப்படுகின்றன. இந்த ஆபத்தான போக்கை நாம் எதிர்க்க வேண்டும்,” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசையும் சத்தீஸ்கர் அரசையும் கண்டித்து, ஜூலை 29, அன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடர்பான கேள்விகளை கேரள எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களும் முன்வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், “கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் மதமாற்றம் அல்லது ஆள் கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. கன்னியாஸ்திரிகளை விடுவிக்க சத்தீஸ்கர் அரசை வலியுறுத்தியுள்ளோம். சம்பவம் நடந்த உடனேயே நாங்கள் சத்தீஸ்கர் அரசைத் தொடர்பு கொண்டோம். கன்னியாஸ்திரிகள் மூன்று இளம் பெண்களையும், ஏழ்மையில் வாழும் அவர்களின் பெற்றோரின் சம்மதத்துடனே அழைத்துச் செல்லச் சென்றனர். இதில் ஆள் கடத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த விவகாரத்தில் சத்தீஸ்கர் அரசு கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்

கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள், ஜாமீன் கோரி துர்க் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி அனிஷ் துபே முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால், ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகள் சம்பந்தமான இந்த வழக்கு, அமர்வு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாக்குவதாகவும், இது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நீதிமன்றத்தின் கீழ் வருவதாகவும் கூறி, நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். இதனால், வழக்கு இப்போது பிலாஸ்பூரில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதுவரை கன்னியாஸ்திரிகள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். புகார்தாரரின் வழக்கறிஞர், என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்ட விவகாரம் கேரள மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

b.j.p Kerala police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe