நாடு முழுவதும் தெரு நாய்க்கடி சம்பவங்கள் பூதாகரமாகி வரும் நிலையில் திருச்சியில் திருவெறும்பூர் பகுதியில் தெரு நாய்கள் ஆங்காங்கே உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி திருவெறும்பூர் நாவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட போலீஸ் கார்டன் பகுதியில் பல்வேறு இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஆங்காங்கே இறந்து கிடந்தன. ஊரகப்பகுதியாக உள்ள அப்பகுதியில் அதிகமான தெருநாய்கள் இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் இந்த பகுதியில் அதிகம் இருக்காது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அங்குள்ள தெருநாய்களுக்கு உணவு வைத்து வருகின்றனர். ஒரு சிலர் இரவு நேரங்களில் நாய்களுக்காக பிஸ்கட் மற்றும் உணவு வகைகளை போட்டு வருகின்றனர்.
நேற்று வழக்கம்போல தெருவில் வைத்த உணவை உண்ட தெருநாய்களில் இதுவரை ஐந்து தெரு நாய்கள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நாய்களுக்கு வைக்கப்பட்ட உணவில் விஷம் வைக்கப்பட்டு அவை கொல்லப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.