கோவையில் தெரு நாய்கள் ஆட்டைத் தாக்கிய சம்பவம்: பொதுமக்கள் அதிர்ச்சி, மாநகராட்சி மீது குற்றச்சாட்டுகோவை, கரும்புக்கடை சலாமத் நகர் பகுதியில் நடந்து சென்ற ஆட்டை ஐந்து தெரு நாய்கள் கடித்து தாக்கும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கோவை 86-வது வார்டில் உள்ள புல்லுக்கட்டு கழிவுநீர் பண்ணை அருகே தெரு நாய்களுக்கான கருத்தடை மையம் அமைந்துள்ளது.
கோவை மாநகராட்சியால் பிடிக்கப்படும் தெரு நாய்கள் இந்த மையத்தில் வைத்து கருத்தடை செய்யப்படுவது வழக்கம். ஆனால், இரவு நேரங்களில் கருத்தடை செய்யப்பட்ட நாய்களை 86-வது வார்டு பகுதி முழுவதும் மாநகராட்சி அதிகாரிகள் விடுவிப்பதால், அப்பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தெரு நாய்கள் உணவுக்காக வளர்ப்பு பிராணிகளான கோழி, ஆடு, மாடு போன்ற கால்நடைகளை கூட்டாகத் தாக்குவது வழக்கமாகிவிட்டதாகவும், இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தெரு நாய்களுக்கு பயந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களுக்கான கருத்தடை மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 86-வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.