நாடு முழுவதும் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் மனிதர்கள் நாய் கடிக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறுவர்களை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்கும் காட்சிகள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானாவில் நான்கு வயது சிறுவன் தெருநாய் கடியால் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தெலங்கானாவில் உள்ள துங்கூரு கிராமத்தைச் சேர்ந்த ரிஷித் என்ற 4 வயது சிறுவனை இரண்டு மாதங்களுக்கு வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. நாயின் பிடியில் இருந்து தப்பி சிறுவன் ஓட முயன்ற நிலையில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த சிறுவனுக்கு காயங்கள் ஏற்பட்டது. நாய் கடிக்கவில்லை என நினைத்துக்கொண்ட சிறுவனின் பெற்றோர்கள் நாய் கடிக்கு சிகிச்சை அளிக்காமல், கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களுக்கு மட்டும் சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் மழையில் சிறுவன் நனைந்த போது சிறுவனின் உடல் மொழியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுவனை பரிசோதித்த நிலையில் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இந்நிலையில் சிகிச்சையில் இருந்த சிறுவன் ரிஷித் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.