Stray dogs bite and maul girl in front of mother - shock in Pooviindavalli Photograph: (cctv)
நாடு முழுவதும் தொடர்ச்சியாக நாய் கடி சம்பவங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான பிரச்சினை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த பிரச்சனை உச்ச நீதிமன்றம் வரை சென்றது. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி பல்வேறு உத்தரவுகளையும் வெளியிட்டது.
இருப்பினும் மறுபுறம் தெருநாய்களால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நேற்று தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் தனியாக சென்ற சிறுமி ஒருவரை சாலையில் படுத்திருந்த தெருநாய்கள் ஒன்றுகூடி கொடூரமாக கடித்துக் குதறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் சென்னை பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகரில் நேற்று மாலை பள்ளி முடிந்து தாயுடன் நடந்து சென்ற சிறுமியை இரு தெருநாய்கள் சுழன்று சுழன்று கடிக்க முயன்ற சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தாய் தடுக்க முயன்றும் விடாமல் இரண்டு நாய்கள் கடித்து குதற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட சிறுமி சமீரா மற்றும் அவரது தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே நாய்கள் அந்த பகுதியில் சிறுவர்கள் உட்பட 10 க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறியதாகக் கூறப்படுகிறது.
Follow Us