நாடு முழுவதும் தொடர்ச்சியாக நாய் கடி சம்பவங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான பிரச்சினை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த, தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு நாய் பிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இதுகுறித்து பலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து, தெருநாய்களுக்கு திறந்தவெளியில் உணவு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, கேரளாவில் தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், மேடையில் நடித்திக் கொண்டிருந்த போதே நாடக நடிகரை தெருநாய் ஒன்று உண்மையிலேயே கடித்த சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூர் அருகே தெருநாய்களைக் கட்டுப்படுத்து விழிப்புணர்வு நாடகம் ஒன்று நடைபெற்றது. இதனை அங்குள்ள பொது மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த வீதி நாடகத்தில் ராதாகிருஷ்ணன் என்ற நாடக நடிகர் நடித்துக் கொண்டிருந்த போது, தெருநாய் ஒன்று கடித்தது. நாய் கடித்தபோதும் அவர் வலியைப் பொறுத்துக்கொண்டு நாடகத்தை நடித்து முடித்தார். தெருநாய் கடிப்பதும் நாடகத்தின் ஒரு பகுதி தான் என்று அங்கு வேடிக்கை பார்த்த மக்கள் கருதியுள்ளனர். இதனையடுத்து ராதாகிருஷ்ணன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.