'Stop it; it's painful' - Interview with Sengottaiyan Photograph: (admk)
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை அண்மையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வைத்திருந்தது அதிமுகவில் பேசுபொருளாகி இருந்தது. தொடர்ச்சியாக செங்கோட்டையன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ஐ சென்னையில் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு மேற்கொண்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கமளித்துப் பேசுகையில், ''யாரையும் அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை என்பதை நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வதந்தியை சில பேர் வேண்டும் என்று பரப்பி வருகிறார்கள். அது தனக்கு வேதனை அளிக்கிறது என்பதை இந்த நேரத்தில் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
வேண்டுமென்றே வதந்திகளை பரப்புகிறவர்கள் மீது என்னால் இதற்கு பதில் சொல்ல இயலாது. சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் நான் சந்திக்கவில்லை. இதுபோன்ற செய்திகள் வருகின்ற பொழுது நேற்று முன்தினம் அதற்கான தெளிவான விளக்கங்களை குறிப்பிட்டு இருந்தபோதிலும் தொடர்ந்து நேற்று மாலை சில பேரை சந்தித்ததாக குறிப்பிட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் இன்று வரையிலும் குறிப்பிடுகின்ற யாரையும் சந்திக்கவில்லை. இதுபோன்ற வதந்திகளை பரப்பி எனக்கு ஒரு அவப்பெயர் வர வேண்டும் என்ற நோக்கத்தோடு சிலர் திட்டமிட்டு இந்த செயல்பாடுகளை செய்து வருகிறார்கள். அது எனக்கு மிகவும் வேதனை அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. என்னுடைய நோக்கம் எல்லோரும் ஒருங்கிணைய வேண்டும். எம்ஜிஆரின், ஜெயலலிதாவின் ஆட்சி மலர வேண்டும். கோடிக்கணக்கான தொண்டர்களுடைய கனவு நிறைவேற்றப்பட வேண்டும். இதுபோன்ற வதந்திகளை இனியாவது அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள்'' என்றார்.
Follow Us