மத்தியப் பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தின் பாக் பகுதியில் சமூக நல மையம் ஒன்று அமைந்துள்ளது. இதில், கடந்த 13ஆம் தேதி அரசுத் திட்டத்தின் கீழ் குடும்ப கட்டுப்பாடு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த சுமார் 180 பழங்குடியின பெண்கள் கலந்து கொண்டனர். 30 படுக்கைகள் மட்டுமே உள்ள அந்த மையத்தில் 175 பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமிற்கு அரசு மருத்துவர் வராத காரணத்தினால், அப்பகுதியின் மருத்துவ அதிகாரி, தனியார் மருத்துவர் ராகேஷ் தாவரை வரவழைத்திருந்தார். இந்த மருத்துவர் மதியம் 3 மணி வரை மருத்துவமனைக்கு வரவில்லை. ஆனால், அப்பெண்கள் காலை 8 மணிக்கே முகாமிற்கு வர வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மதியம் வரை மருத்துவருக்காகக் காக்க வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், காலையில் இருந்து காத்திருந்த அவர்களுக்குத் தண்ணீர், உணவு என எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மதியம் மூன்று மணிக்கு வந்த மருத்துவர் ராகேஷ், அனைத்து பெண்களையும் வரிசையாகப் படுக்க வைத்து, ஒரு நபருக்கு இரண்டு நிமிடம் என அனைவருக்கும் சரசரவென அறுவை சிகிச்சையைச் செய்து முடித்துள்ளார். அந்த அறுவை சிகிச்சையின் போது, முறையான மருத்துவ வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்த பின்பு மருத்துவர் கையுறைகளையும் மாற்றவில்லை. அதே நேரத்தில், அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகளையும் தூய்மைப் படுத்தவில்லை. இதனால் அப்பெண்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், அவர்களுக்கான படுக்கை வசதி இல்லாத காரணத்தினால், சிகிச்சை முடித்து பெண்கள் தரையில் படுக்க வைக்கப்பட்டனர். அங்கேயும் போதிய இடமில்லாத காரணத்தினால் சிலர் குப்பைகளின் அருகே படுக்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சுகாதாரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையினால் பலருக்கும் நோய்த் தொற்று மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவிய நிலையில், சுகாதாரத் துறை சம்பந்தப்பட்ட முதன்மை மருத்துவ அதிகாரியைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது. மேலும், மருத்துவரிடம் துறைரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/18/surger-2026-02-18-20-20-39.jpg)