Status of Erode district dams Photograph: (weather)
ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், திம்பம், தாளவாடி, கடம்பூர், பர்கூர் போன்ற மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தரைப்பாலங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதேபோல் அணைப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஈரோடு , கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 2.47 லட்சம் விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து தீபாவளி அன்று 102 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வந்த நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக நீடிக்கிறது. அணைக்கு 3,278 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 1, 800 கன அடியும், பவானி ஆற்றுக்கு 1,350 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இதே போல் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 100 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக உள்ள கொடிவேரி தடுப்பணையில் 10-வது நாளாக வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் 10-வது நாளாக கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் குண்டேரி பள்ளம் அணைப்பகுதியில் மழை கொட்டி தீர்த்ததால் அணையின் முழு கொள்ளளவான 41.75 அடியை எட்டியது. இதை அடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதைப்போல் பெரும்பள்ளம் அணைப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் அணையின் முழு கொள்ளளவான 30.84 அடியை எட்டி அணை நிரம்பியது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி வறட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 27.99 அடியாக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக முக்கிய அணைகள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Follow Us