தமிழ்நாட்டில், வடமாநிலங்களைப் போலவே, விநாயகர் சதுர்த்தி விழாவும், விநாயகர் சிலை ஊர்வலங்களும் ஆண்டுதோறும் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும் விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் எளிதில் கரையும் தன்மையுடனும், சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளைப் பாதிக்காத வகையில் வண்ணங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், 10 அடிக்கு மேல் உயரமுள்ள சிலைகள் செய்யக்கூடாது என்ற அரசு விதிகளுக்கு உட்பட்டு, களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், வாழ்வாதாரம் இழந்திருந்த மண்பாண்டக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சில மாதங்களுக்கு வேலைவாய்ப்பும், சிறிதளவு வருவாயும் கிடைத்து வருகிறது.
கொரோனா காரணமாக தடை செய்யப்பட்டிருந்த திருவிழாக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதால், கடந்த ஆண்டு முதல் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும், தமிழ்நாடு முழுவதும் மண்பாண்டக் கலைஞர்கள் ஆயிரக்கணக்கில் களிமண் விநாயகர் சிலைகளைத் தயாரித்து வைத்துள்ளனர். அதேவேளை, வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் பல்வேறு மாவுகளைக் கொண்டு விநாயகர் சிலைகளை உருவாக்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையூர், துவரடிமனை, வாராப்பூர், அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், செரியலூர், நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, துவரடிமனை கிராமத்தில் மண்பாண்டக் கலைஞர்கள் அரை அடி முதல் 10 அடி உயரம் வரை 1,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை உருவாக்கி, வண்ணம் தீட்டி வருகின்றனர். குடும்பத்தினர் மற்றும் சம்பளத் தொழிலாளர்கள் மூலம் கடந்த சில மாதங்களாக இரவு பகலாக இந்தச் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டுகளில், ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் பிள்ளையார், யானை மற்றும் குதிரை மீது சவாரி செய்யும் பிள்ளையார், புல்லாங்குழல் வாசிக்கும் பிள்ளையார், ஆயுதங்களுடன் உள்ள பிள்ளையார், லிங்கம் தூக்கும் பிள்ளையார், முருகன் மடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையார் என பலவகையான, அரை அடி முதல் 10 அடி உயரமுள்ள சிலைகள் உருவாக்கப்பட்டன. இந்த ஆண்டு, போர் வீரன், செல்போனில் செல்பி எடுக்கும் பிள்ளையார், பாம்பின் மீது படுத்திருக்கும் பிள்ளையார் போன்ற புதிய வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, துவரடிமனையைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர் கோ. சங்கர் கூறியதாவது: “முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இருந்தனர். ஆனால், நவீனமயமாக்கலால் சமையல் பாத்திரங்கள் முதல் தண்ணீர் குடங்கள் வரை எவர்சில்வர் உள்ளிட்ட பிற பொருட்களால் ஆன பாத்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்ததால், எங்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. இதனால், இளைய தலைமுறையினர் இந்தத் தொழிலைத் தொடர முன்வரவில்லை; பலர் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர்.
இதனால், வெளியூரைச் சேர்ந்த திறமையான தொழிலாளர்களை சம்பளத்திற்கு அமர்த்தி சிலைகளை உருவாக்கி வருகிறோம். கொரோனா காலத்தில், செய்த சிலைகள் விற்பனையாகாமல் தேங்கியதால், சம்பளம் கொடுக்க முடியவில்லை; குடும்பத்தையே நடத்துவதில் சிரமப்பட்டோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு அனுமதி கிடைத்ததால், மீண்டும் நம்பிக்கையுடன் சிலைகளை உருவாக்கி வருகிறோம். பலர் ஆர்டர்கள் கொடுத்துள்ளனர்; நேரில் வந்து சிலைகளைப் பார்க்கின்றனர்.
இந்த ஆண்டு, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும், எங்கள் கற்பனைக்கு ஏற்பவும் புதுமையான வடிவங்களில் பிள்ளையார் சிலைகளை உருவாக்கி வருகிறோம். சுற்றுச்சூழலையும் நீர்நிலைகளையும் மாசுபடுத்தாத வகையில், களிமண், தென்னை நார், நெல் உமி ஆகியவற்றைப் பயன்படுத்தி சிலைகளைத் தயாரித்து, நீரில் கரையும் வண்ணங்களை மட்டுமே பூசுகிறோம். மேலும், மண்ணோடு நாட்டு மரவிதைகளைக் கலந்து சிலைகளை உருவாக்கியுள்ளோம்.
என் தந்தை காலத்தில் விநாயகர் சிலைகள் செய்யவில்லை. நான் இத்தொழிலைத் தொடங்கிய பிறகு, ஆரம்பத்தில் ஆண்டுக்கு ஒரு சில சிலைகளைச் செய்தேன். எங்கள் சிலைகள் தரமாகவும், சுத்தமாகவும் இருந்ததால், பின்னர் நூற்றுக்கணக்கில் உருவாக்கினோம். இப்போது எங்கள் வீட்டில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலைகளைத் தயாரித்துள்ளோம்.
நாங்கள் களிமண்ணில் செய்யும் பிள்ளையார் சிலைகள், நீரில் போட்டவுடன் 10 நிமிடங்களில் கரைந்து, மண்ணோடு மண்ணாகச் சேர்ந்துவிடும். கலந்த விதைகள் எங்காவது ஒரு இடத்தில் முளைத்து மரமாக வளரும். ஆனால், மாவு விநாயகர் சிலைகள் எளிதில் கரைவதில்லை. அதனால், மக்கள் எங்களைத் தேடி வந்து களிமண் பிள்ளையார் சிலைகளை வாங்குகின்றனர். அரசு எங்களுக்கு தேவையான இயந்திரங்களை வழங்கினால், இன்னும் வசதியாக இருக்கும்,” என்றார்.