இலங்கையில் கடந்த சில தினங்களாக அதி கனமழையானது பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக இலங்கையின் தென்பகுதிகளில் நேற்று முன்தினம் (27.11.2025) பெய்த அதிக கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலரைக் காணவில்லை என்ற தகவலும் வெளியாகியிருந்தது. அதோடு காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது. 

Advertisment

தொடர்ச்சியாகக் கனமழை பெய்ததன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த புயலானது இலங்கையே புரட்டிப் போட்டுள்ளது. அங்குள்ள அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளவை எட்டியுள்ளதால் உபரி நீரானது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்துள்ளன. 

Advertisment

இதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர். 130 பேர் இதுவரை காணவில்லை எனவும் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றையும் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அதாவது இலங்கையில் சுமார் 3 லட்சத்து 73 ஆயிரம் பொதுமக்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக இலங்கை அரசானது தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில் தான் மீட்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்த நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை அரசின் சட்டத்தின்படி அந்நாட்டுக் குடியரசுத் தலைவருக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கப்படும். இலங்கையின் குடியரசுத் தலைவராக அநுர குமார திசாநாயக்க பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

sl-flood

எனவே மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கும் மற்றும்  உரிய முடிவுகளை எடுப்பதற்கும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் அங்குள்ள நிலைமை தொடர்ந்து மோசமாகி  வருவதால் இந்தியா அரசு சார்பில் இலங்கைக்கு  சுமார் 27 டன் அளவுக்கான நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்களை மீட்புப் பணியில் பயன்படுத்துவதற்கு இந்திய அரசானது அனுமதி வழங்கியுள்ளது. அதோடு  விக்ராந்த் ரக கப்பல்கள் மற்றும் சிறு கப்பல்களையும் மீட்புப் பணிகளுக்கும், என்.டி.ஆர்.எப். வீரர்களுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Advertisment