'Stalin with you' petitions thrown into the river - twists and turns continue due to different interpretations Photograph: (Sivagangai)
அண்மையில் 'உங்களுடன் ஸ்டாலின்' எனும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார். இந்த திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று (29/08/2025) சிவகங்கையில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மக்கள் அளித்த மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்து வருவதாக நபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரணை ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து வாங்கப்பட்ட மனுக்கள் மிதப்பதாக கார்த்திக் என்ற நபர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் ஆற்றுப் பகுதிக்கு வந்த போலீசார் தண்ணீரில் மிதந்த மனுக்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் சிவகங்கையின் கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை,பூவந்தி, ஏனாதி, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விளக்க அறிக்கை ஒன்றை கொடுத்திருந்தார். அதில், வைகை ஆற்றில் கிடந்த மனுக்கள் அனைத்தும் நகல்கள் என்றும், குறைகள் தீர்க்கப்பட்ட மனுக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில் திருப்புவனம் வட்டாட்சியர் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சர்வே அலுவலகத்தில் இருந்த மனுக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று அவற்றை வைகை ஆற்றில் வீசியதாக புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்துள்ள திருப்புவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியரின் விளக்கத்திற்கும் வட்டாட்சியரின் புகார் தொடர்பாக போலீசார் வழக்கு தொடர்ந்த சம்பவத்திற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால் இந்த சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.