கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு 46 வகையான அரசுத் திட்டங்களின் சேவைகள் மனுசெய்த 45 நாட்களுக்குள் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது' என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் அதிமுக ஜெயக்குமார் பேசுகையில், ''கடந்த நான்கரை வருடத்தில் கிட்டத்தட்ட சட்ட ஒழுங்கு போய்விட்டது. கஞ்சா, போதை வஸ்துக்கள் தவழுகின்ற மாநிலமாக தமிழ்நாடு ஆகிவிட்டது. ஆள் கடத்தல் கடத்தல், கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கட்டப்பஞ்சாயத்து அது மட்டுமில்லாமல் 24 மேற்பட்ட லாக்-அப் மரணங்கள் என அதிகரித்துவிட்டது.
இன்று தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடைபெறவில்லை. காட்டுத் தர்பார் போல இரண்டு பேர் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடக்கிறது. ஒன்று போலீஸ் ஆட்சி இன்னொன்று அதிகாரிகள் ஆட்சி. எல்லா தேர்தல் வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. இப்பொழுது புதிதாக ஒரு டைட்டில் வைத்திருக்கிறார்கள் 'உங்களுடன் ஸ்டாலின்' என்று 'பொய்களுடன் ஸ்டாலின்' தான் என்றுதான் சொல்ல முடியும். உண்மையிலேயே சீனியர் மோஸ்ட் ஐஏஎஸ் ஆபிசர்களை இவ்வளவு அசிங்கப்படுத்தக் கூடாது. மக்கள் தொடர்பு அதிகாரிகள் ஏற்கனவே இருக்க நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை பிஆர்ஓ வேலை செய்ய வைத்துள்ளார் முதல்வர். திமுக ஆட்சியில் மக்களாட்சி கிடையாது. அதிகாரிகள் ஆட்சிதான் நடைபெறுகிறது'' என்றார்.