முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் 'தாயுமானவர்' திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அத்திட்டம்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள அ.முக்குளம் கிராமத்தில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை நேரில் சென்று வழங்கினார்.

அப்போது முதியவர்களின் கையைப் பிடித்தபடி  “ரேஷன் கடைக்கு போயிட்டு வர்றதுக்கு நடைமுறைல எவ்வளவு சிரமம் இருக்கும். ஸ்டாலின் சார், உங்கள மாதிரி சிரமப்படறவங்க வீட்ல போய் கொடுக்கச் சொல்லிருக்காரு.” என்று நெகிழ்ச்சியுடன் கூற, அம்மக்கள் கையெடுத்துக் கும்பிட்டனர்.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாகவும், அவர்களது அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதற்காகவும்  தாயுமானவர் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் வாயிலாக வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது, அதனால் “நேரம் மிச்சமாவதுடன், எவ்வித சிரமமும் இன்றி பொருள்களை எளிதாகவும் விரைவாகவும் பெறமுடிகிறது” என்கிறார்கள் பயனாளிகள்.