தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் 'தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' என்ற பெயரில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் நடை பயணத்தை நேற்று திருப்போரூரில் தொடங்கியிருந்தார். இன்று செங்கல்பட்டு பகுதியில் நடைபெற்ற நடை பயணத்திற்கு பிறகு நிகழ்ச்சி மேடையில் அன்புமணி பேசுகையில், ''தமிழக மக்களுக்கு கிடைக்கும் உரிமைகளை திமுக ஆட்சி தடுத்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். அகற்றுகின்ற காலம் வந்துவிட்டது. இது ஊழல் ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி, கஞ்சா ஆட்சி, சாராய ஆட்சி, மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் காலம் வந்துவிட்டது. அதற்கு நீங்கள் முடிவு எடுக்க வேண்டும் என்ற முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

நீங்கள் முடிவு செய்யுங்கள், தமிழக மக்கள் முடிவு செய்யுங்கள் நமக்கு யார் வேண்டும் என்பதை விட யார் வேண்டாம் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அதுதான் முக்கியம். உங்களுக்கு யார் வேண்டும் என்பது முக்கியம் கிடையாது யார் வேண்டாம் அதுதான் முக்கியம். அதை மீண்டும் நான் சொல்கிறேன். நான் உங்களிடம் ஓட்டு கேட்க வரவில்லை. திமுக ஆட்சி வேண்டாம். ஏதோ ஒரு தப்பு நடந்து போய்விட்டது. போன சட்டமன்ற தேர்தலில் ஒரு தப்பு நடந்து விட்டது சரி. அந்த தப்பை மீண்டும் செய்யாதீர்கள். அதை நீங்கள் உங்கள் மனதிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தவறை மீண்டும் செய்யாதீர்கள். மீண்டும் செய்தால் உங்கள் பிள்ளைகள், உங்க பேரப்பிள்ளைகள் வாழ்க்கையே நாசமாகி முடிந்துவிடும், உங்கள் பிள்ளைகளை நீங்கள் பார்க்க முடியாது.

இந்த நான்கரை ஆண்டு காலம் அழிச்சிட்டாங்க, ஒழிச்சிட்டாங்க. சின்ன சின்ன பிள்ளைகளும், 10 வயசு புள்ள கஞ்சா அடிச்சுக்கிட்டு இருக்கான். 12 வயதில் என்னென்ன போதையோ அதையெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். அதிகமாக இந்த போதைப் பொருள் எங்கே விற்கிறார்கள் என்றால் பள்ளிக்கூட வாசலிலும் கல்லூரி வாசலிலும் தான்.

Advertisment

ஒரு காலத்தில் பள்ளிக்கூட வாசலில் மாங்கா பத்தை, தேன் மிட்டாய் விற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால் இன்று அங்கு போனால் கஞ்சா பொட்டலம், பவுடர், மாத்திரை எல்லாம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற ஆட்சி இதுவரை தமிழ்நாட்டில் நடந்தது கிடையாது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. அவரை வைத்துக் கொண்டு இவர்கள் ஷோ காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரும் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் வெளியில் வருகிறார். கால் சீட் கொடுக்கிறார். அதன் பிறகு வீட்டுக்கு போய் விடுகிறார். அவரை வைத்துக் கொண்டு டிராமா செய்து கொண்டு இருக்கிறார்கள். நாடக ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையிலே முதலமைச்சருக்கு அக்கறை இருந்தால் இந்த கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒரே நாளில் ஒழிக்கலாம். சாதாரண விஷயம். காவல்துறைக்கு தெரியாமல் யாரும் கஞ்சா  விற்க முடியாது. இது உண்மைதான்''என்றார்