கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையைச் சேர்ந்த எஸ்.எஸ்.ஐ. அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள வழவந்தி நாடு என்ற இடத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மோகன்குமார் (வயது 55). இந்நிலையில் இவர் 19 வயது கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பாலியல் வன்கொடுமை புகாரின் கீழ் சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன்குமார் நாமக்கல் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள், காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.