விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த  ஒரு அதிர்ச்சியான சம்பவம், மூன்றாம் பாலினம் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சவால்களை மீண்டும் சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. பொதுமக்கள் கூடும் பகுதியில், அதுவும் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல் நிலையம் அருகே திருநங்கை முத்தரசி  திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து, அவரை மீட்டு மருத்துவமனயில் சேர்த்தனர். இந்த தீக்குளிப்பு முயற்சி, திடீர் கோபம் அல்லது தனிப்பட்ட மனவேதனை மட்டுமல்ல; தொடர்ச்சியான அவமதிப்பு, வாழ்வாதார சிக்கல், சமூக அழுத்தம் போன்ற பல காரணங்களின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. 

Advertisment

ஸ்ரீவில்லிபுத்தூர் சம்பவம் ஒருபுறம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறம் திருநங்கைகள் குறித்த எதிர்மறை விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது. மூன்றாம் பாலினம் எனப்படும் திருநங்கைகள், இன்று அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற குடிமக்களாக இருந்தாலும், அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் நிராகரிப்பு குறைந்துவிடவில்லை என்பதே நிதர்சனம். ரோடு சிக்னல்கள், பேருந்து நிலையங்கள், ஓடிக்கொண்டிருக்கும் ரயில்கள் போன்ற இடங்களில் திருநங்கைகள் கைதட்டி பணம் கேட்பதெல்லாம் நாம் அன்றாடம் பார்க்கின்ற காட்சிகள் தான்.“சபித்துவிடுவார்களோ?”, “அவர்களது சாபம் பலித்துவிடுமோ?” என்ற அச்சத்தின் காரணமாக பலர் மனமின்றி பணம் கொடுப்பதும், அதற்குப் பதிலாக ஆசீர்வாதம் பெறுவதும் சமூகத்தில் ஆழமாக ஊறியுள்ள மூடநம்பிக்கைகளின் வெளிப்பாடாகும். 

Advertisment

இது திருநங்கைகளை சக மனிதர்களாக அல்லாமல், பயமும் நம்பிக்கையும் கலந்த உருவகமாகப் பார்க்கும் மனநிலையைக் காட்டுகிறது. அதே நேரத்தில், சில இடங்களில் நிகழும் சட்டத்திற்கு முரணான செயல்கள், ஒட்டுமொத்த மூன்றாம் பாலின சமூகத்தையே சந்தேகக் கண்களால் பார்க்கச் செய்கின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் சம்பவமும், தனிநபர் அளவில் நடந்த ஒரு செயல் எவ்வாறு ஒரு சமூகத்தின் மீது பொதுப்பார்வையைத் திருப்பிவிடுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. ஆனால், ஒரு சிலரின் செயல்களை வைத்து முழு சமூகத்தையும் மதிப்பீடு செய்வது நியாயமல்ல என்பதையும் இங்கு வலியுறுத்த வேண்டியுள்ளது. 
 

siren-police

திருநங்கைகள் குற்றச்செயல்களுக்கு அல்லது தீவிரமான மனநிலைச் செயல்களுக்கு தள்ளப்படுவதற்கான காரணங்களைப் புறக்கணிக்க முடியாது. குடும்பத்திலிருந்து ஒதுக்கப்படுதல், பள்ளி வாழ்க்கையில் அவமானம், வேலைவாய்ப்புகளில் நிராகரிப்பு, நிரந்தர வருமானம் இல்லாத நிலை ஆகியவை தொடர்ச்சியாக நீடிக்கும் போது, மனஅழுத்தமும் விரக்தியும் அதிகரிக்கிறது. சில சமயங்களில் அது ஸ்ரீவில்லிபுத்தூர் சம்பவம் போன்ற துயரமான வெளிப்பாடுகளாக வெடிக்கிறது. மூன்றாம் பாலினத்தை முன்புபோல் “பயம்” அல்லது “இரக்கம்” கலந்த பார்வையுடன் பார்க்காமல், சக மனிதர்களாக மதிக்கும் மனப்பாங்கு சமூகத்தில் வலுப்பெற வேண்டும். அரசு அளிக்கும் அங்கீகாரம் சட்ட ஆவணங்களில் மட்டும் இல்லாமல், நடைமுறை வாழ்க்கையிலும் உணரப்பட வேண்டும். 

Advertisment

அதே நேரத்தில், திருநங்கைகள் மத்தியில் விழிப்புணர்வும் அவசியம். உரிமைகளுடன் சேர்ந்து பொறுப்புகளும் இருப்பதை உணர்ந்து, சட்டத்திற்கும் சமூக ஒழுங்கிற்கும் உட்பட்டு வாழ வேண்டிய தேவை அவர்களிடமும் உருவாக வேண்டும். சமூகம் ஒருபுறம் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, மறுவாழ்வு திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும். அரசு மற்றொரு புறம் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் செயல்படுத்தி, மனநல ஆதரவு, ஆலோசனை போன்ற உதவிகளையும் மூன்றாம் பாலினத்தினருக்கு எளிதாக கிடைக்கச் செய்ய வேண்டும். 

அப்போதுதான் ஸ்ரீவில்லிபுத்தூர்  தீக்குளிப்பு போன்ற சம்பவங்கள், பரபரப்புச் செய்திகளாக மட்டும் அல்லாமல், சமூகத்தை சுய ஆலோசனைக்கு அழைக்கும் எச்சரிக்கைகளாகவும் மாறும். மூன்றாம் பாலினம் இரக்கம் கேட்கும் அடையாளமல்ல;​ உரிமையுடனும் மரியாதையுடனும் வாழ விரும்பும் மனித அடையாளம்.​ அதை உணர்ந்து செயல்படுவதே இன்றைய சமூகத்தின் உண்மையான விழிப்புணர்வாக இருக்க முடியும்.