போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், 'காவல்துறை விசாரணைக்காக அழைத்த பொழுது ஆஜராகி கிருஷ்ணா முழு ஒத்துழைப்பு வழங்கினார். மருத்துவப் பரிசோதனையில் அவர் போதைப்பொருளை பயன்படுத்தவில்லை என்ற முடிவுக்கு வந்த நிலையில் அவரை கைது செய்துள்ளனர். இது அடிப்படை உரிமையை மீறிய செயல். எதன் அடிப்படையில் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார் என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை' என வாதிடப்பட்டது.
அதேபோல் ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கு, 'போதைப்பொருளை பதுக்கி வைப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது' என்ற வாதம் வைக்கப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பைத் தள்ளி வைத்துள்ளனர்.
இன்று மாலையே இந்த ஜாமீன் மனு மீதான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.