ஸ்ரீவைகுண்டம் அருகே, வடக்கு தோழப்பன் பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதான தர்மர். விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், ஸ்ரீவைகுண்டம் சுபா நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.தர்மரின் சொந்த ஊரான வடக்கு தோழப்பன் பண்ணை கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயில் கொடை விழா ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு நடைபெற்றது. இந்தக் கொடை விழாவில் பங்கேற்க, தர்மர் ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து, அவரது மனைவி துரைசெல்வி மற்றும் மகன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சில நிமிடங்கள் இடைவெளியில் சென்றனர். செந்திலாம் பண்ணை ஆலமரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் தர்மரை வழிமறித்து அவரது ஊரின் பெயரைக் கேட்டது.

Advertisment

தர்மர், "தோழப்பன் பண்ணை" என்று கூறியவுடன், அந்தக் கும்பல் அவரை அரிவாளால் தலை, கழுத்து, முகம் ஆகியவற்றில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இதில், தர்மர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சில நிமிடங்களில் அவ்வழியாக வந்த தர்மரின் மனைவி துரைசெல்வி, தனது கணவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் பத்மநாப பிள்ளை தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தர்மரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை குறித்து, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல் துணைக் கண்காணிப்பாளர் நரேஷ் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், தோழப்பன் பண்ணை கிராமத்தில் 28 ஆம் தேதி இரவு நடைபெற்ற கருப்பசாமி கோயில் கொடை விழாவில், அருகிலுள்ள பத்மநாப மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கும்பலாக வந்திருந்தனர். அவர்களில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 25 வயதான ஆண்டியா குமார் உள்ளிட்டவர்கள், கோயிலில் சாமி கொடைக்காக நையாண்டி மேளம் அடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென உள்ளே புகுந்து சாமி ஆடியுள்ளனர். இதனைக் கண்ட தோழப்பன் பண்ணை கிராம மக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர், "வரி செலுத்தியவர்கள் மட்டுமே இங்கு சாமி ஆட வேண்டும். வெளியூர்காரர்கள் எங்கள் கோயிலில் குடிபோதையில் சாமி ஆடக் கூடாது. வெளியே போங்கடா.." என்று கூறியுள்ளனர்.

இதனால், பத்மநாப மங்கலத்தைச் சேர்ந்த ஆண்டியா குமார் உள்ளிட்டவர்களுக்கும், தோழப்பன் பண்ணை கருப்பசாமி கோயில் நிர்வாகத்தினருக்கும் இடையே உரிமைத் தகராறு ஏற்பட்டது. "இது எங்களுக்கு தாய்வழி உறவு முறையுள்ள கோயில். நாங்கள் சாமி ஆடுவோம்" என்று பத்மநாப மங்கலத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அங்கு வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறையினர், இரு தரப்பினரையும் எச்சரித்து அமைதிப்படுத்தினர். மேலும்,  பத்மநாப மங்கலத்தில் இருந்து கொடை விழா பார்க்க வந்தவர்களை, அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். அப்போது, “இன்னைக்கு எப்படி கொடை விழா நடக்குதுன்னு பார்ப்போம். சாம கொடையில் நீங்க கிடா தான் வெட்டுவீங்க; நாங்க தலையை வெட்டுவோம். விடிவதற்குள் பல தலைகள் உருளும்" என்று எச்சரித்துவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisment

அதைத் தொடர்ந்து, நள்ளிரவு 1:30 மணியளவில், அந்தக் கும்பல் செந்திலாம் பண்ணை அருகே பதுங்கியிருந்து, தோழப்பன் பண்ணை கிராமத்தை நோக்கி வருவோரை வழிமறித்து ஊரின் பெயரைக் கேட்டு விசாரித்து அனுப்பியுள்ளது. அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தர்மர், "தோழப்பன் பண்ணை...." என்று  கெத்தாக கூறியிருக்கிறாம். "தோழப்பன் பண்ணைனா பெரிய கொம்பன்களாடா நீங்க..?” என்று கேட்டு, அவரை அரிவாளால் மாறி மாறி வெட்டி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர் என்று காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட தர்மரின் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு, 30 ஆம் தேதி மாலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள வீட்டுக்கு அவரது உடலை எடுத்து வந்த குடும்பத்தினரும் உறவினர்களும், ஸ்ரீவைகுண்டம்-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துணைக் கண்காணிப்பாளர் நரேஷ் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்."சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். உயிரிழந்த தர்மரின் குடும்பத்துக்கு அரசு வேலை கிடைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்படும்" என்று காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சாலை மறியல் போராட்டத்தை உறவினர்கள் கைவிட்டு, தர்மரின் உடலை அடக்கம் செய்தனர். மேலும், வேறு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

கோயில் கொடை விழாவில் சாமி ஆடுவதற்கு நிபந்தனை விதித்ததால் ஏற்பட்ட உரிமைத் தகராறு, ஒரு தரப்பு வெறி கொண்டு ஊரின் பெயரைக் கேட்டு கொடூரமாகக் கொலை செய்த சம்பவமாக உருவெடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி