வேலூர் மாவட்டம், மேல்மொனவூர் கிராம மக்களுக்கும், அப்பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (18.07.2025) மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. குழந்தையின் உடலை மேல்மொனவூர் பாலாற்றில் ஜூலை 19 மாலை அடக்கம் செய்துவிட்டுத் திரும்பி வரும்போது, முகாமைச் சேர்ந்த இளைஞர்கள், மேல்மொனவூரில் கடை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளியான தினேஷைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்கச் சென்ற பெண்கள் உட்பட மூவர் தாக்கப்பட்டதில், படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதைக் கண்டித்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக் கோரி, மேல்மொனவூர் கிராம மக்கள் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 நிமிடங்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிற்குச் சென்று அங்குள்ள பொருட்களை உடைத்து, ஒரு காரைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக, மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர்கள், உடலை அடக்கம் செய்யச் சென்ற தங்களை மேல்மொனவூர் கிராம மக்கள் வழிமறித்துத் தாக்கியதாகவும், தங்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தாக்கியதில் ஒரு பெண் உட்பட இருவர் படுகாயமடைந்ததாகவும் கூறி, சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், ஏடிஎஸ்பி அண்ணாதுரை, டிஎஸ்பிக்கள் பிரிதிவிராஜ் ஜவுஹான், திருநாவுக்கரசு, நந்தகுமார் ஆகியோர் இரு தரப்பு மக்களுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இவ்விவகாரம் தொடர்பாக நாளை(ஜூலை 20) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை அடுத்து, இரு தரப்பினரும் சாலை மறியலை கைவிட்டனர். இருப்பினும், இரு தரப்பினரும் காவல்துறையினருடன் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிறிது நேரம் தள்ளுமுள்ளு மற்றும் பரபரப்பு நிலவியது.
இரு தரப்பினரின் சாலை மறியல் காரணமாக, பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்க, மேல்மொனவூர் கிராமத்திலும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதியிலும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக, விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் இரு தரப்பினர் மீதும் சாலை மறியல் மற்றும் அடிதடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.