இலங்கையிடமிருந்து கட்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் புதுப்பிக்கவும், இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள இலங்கை பிரதமரை வலியுறுத்திட, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.10.2025) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “இலங்கை பிரதமரின் 3 நாள் புது தில்லிப் பயணம் அக்டோபர் 16-18, 2025 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயணம், பாக் விரிகுடாவின் பாரம்பரிய மீன்பிடி கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பிரச்சனைகளை தீர்க்க ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக தமிழக மீனவ சமூகங்கள் தொடர்ந்து துன்பங்களை எதிர்கொள்கின்றனர். 2021 முதல், 106 வெவ்வேறு சம்பவங்களில் 1,482 மீனவர்களும் 198 மீன்பிடிப் படகுகளும் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பெரும் துயரத்தையும் பொருளாதார இழப்பையும் எதிர்கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சினைகளைத் தூதரக நடவடிக்கைகள் மூலம் தீர்க்க இந்திய அரசின் தலையீட்டை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரி வருகிறது.இதற்காக, நான் பதினொரு முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு 72 முறை கடிதம் எழுதியுள்ளேன்.
கச்சத்தீவு மீட்பு:
தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். இந்தத் தீவு ஒன்றிய அரசால் மாநில அரசின் முறையான ஒப்புதலைப் பெறாமல் இலங்கைக்கு மாற்றப்பட்டது இந்த முடிவை 1974 முதல் தமிழ்நாடு சட்டமன்றம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதன் விளைவாக நமது மீனவர்கள் இப்போது தங்கள் பாரம்பரிய மீன்பிடித் தளங்களுக்குள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், அத்துமீறி நுழைவதாகக் கூறி அடிக்கடி துன்புறுத்தப்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையில், கச்சத்தீவை மீட்பதற்கும் பாக் விரிகுடா பகுதியில் உள்ள நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பதற்கும், இந்தியாவிற்கு வருகை தரும் மாண்புமிகு இலங்கை பிரதமர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால மற்றும் துயரமான பிரச்சினைகளைத் தீர்க்க இது மிகவும் முக்கியமானதுமாகும்
மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவித்தல்:
தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 76 மீனவர்களும் 242 மீன்பிடி படகுகளும் இலங்கை வசம் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் துயரத்தைத் தணிக்க அவர்களை விரைவாகத் தாயகம் திரும்பவும் அவர்களின் படகுகளை இலங்கை அரசிடமிருந்து விடுவிக்கவும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்
கடலில் வன்முறை மற்றும் திருட்டு சம்பவங்களை தடுத்தல்:
இந்திய மீனவர்கள் தங்கள் மீன்பிடி உபகரணங்கள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்படுவதையும். இலங்கை நாட்டினரால் அடிக்கடி நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் குறித்தும் புகார் அளிப்பதாகவும், இந்தப் பிரச்சினையை திறம்பட தீர்க்க மேம்படுத்தப்பட்ட இருதரப்பு பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மற்றும் நிலையான தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்
பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளை தேசியமயமாக்கியதன் தாக்கம் :
இலங்கை மீன்பிடிச் சட்டத்தில் 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தம், பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை தேசியமயமாக்க வழிவகுத்துள்ளால் அவற்றை மீட்டெடுப்பது சாத்தியமற்றதாகிவிட்டது. இது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியையும் வாழ்வாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்தப் பிரச்சினையை இலங்கை பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்
மீன்வளத்திற்கான கூட்டுப் பணிக்குழுவிற்கு (JWG) புத்துயிர் அளித்தல்:
மேற்குறிப்பிட்டுள்ள இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நிறுவப்பட்ட மீன்வளத்திற்கான கூட்டுப் பணிக்குழு. சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து கூட்டப்படுவதில்லை. எனவே, இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களின் கவலைகளை, நிலையான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் நிவர்த்தி செய்வதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட தளத்தை உருவாக்க இந்த வழிமுறையை மீண்டும் புதுப்பிப்பது அவசியமாகும். இந்தப் பிரச்சினைகளினால் ஏற்படும் மனித மற்றும் பொருளாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தொடர்ச்சியான தூதரக நடவடிக்கைகள் மூலம் விரைவான மற்றும் நீடித்தத் தீர்வை அடையும் நோக்கில், இவற்றை இலங்கை பிரதமரிடம் எடுத்துச் சென்று விவாதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.