தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், சிறைபிடிக்கப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 31 பேரை நிபந்தனைகளுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மீண்டும் எல்லை தாண்டினால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து 31 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/17/fishermenoriginal-2025-11-17-18-48-10.jpg)