மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ‘மகாயுதி’ என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில துணை முதல்வர்களாக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர். மகாயுதி கூட்டணிக்குள் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டாலும், கூட்டணியை கைவிடாமல் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி நடத்தி வருகிறார்.

இம்மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கூட்டணி எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தரமற்ற உணவு கொடுத்ததால் கேண்டீன் ஊழியரை சிவசேனா கட்சி எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் என்பவர் கடுமையாக தாக்கி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து, சிவசேனா கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ சஞ்சய் ஷிர்சாத் வீட்டில் பணப்பையுடன் இருந்து சர்ச்சையில் சிக்கினார். இந்த இரண்டு நிகழ்வுகளும் அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தேவேந்திர பட்னாவிஸுக்கு நெருக்கடியை கொடுத்தது.

இந்த சூழ்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மாநில வேளாண்துறை அமைச்சருமான மாணிக்ராவ் கோகடே, மாநில சட்டமன்றத்தில் தனது மொபைல் போனில் ரம்மி விளையாடுவது போன்ற வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவை சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் பவார் பகிர்ந்து, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். மேலும், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாணிக்ராவ் கோகடேவை கடுமையாக விமர்சித்திருந்தனர். இது குறித்து மாணிக் கோகடே கூறியதாவது, “ஆன்லைன் ரம்மி எப்படி விளையாடுவது என்று எனக்கு தெரியாது. விளையாட்டை விளையாட ஒருவருக்கு ஓடிபி தேவை, மேலும் ஒரு வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும். எனது மொபைல் போன் அத்தகைய விளையாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ஒருவர் சரிபார்க்கலாம். எனது திரையில் 10 முதல் 15 வினாடிகள் தோன்றிய ஒரு விளையாட்டின் விளம்பரத்தை தவிர்க்க முயற்சித்தேன்’ என்று கூறினார்.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள், மகாராஷ்டிரா அரசாங்கம் ஒரு பிச்சைக்கார அரசாங்கம் என மாணிக்ராவ் கோகடே பேசி சர்ச்சைக்கு மேல் சர்ச்சையை ஏற்படுத்தினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர், பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசை, பிச்சைக்கார அரசாங்கம் என்று பேசியிருப்பது அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதனால் கூட்டணி கட்சிகளிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. 

Advertisment

இந்த நிலையில், சர்ச்சைக்கு மேல் சர்ச்சையை ஏற்படுத்திய மாணிக்ராவ் கோகடேவிடம் இருந்து வேளாண் துறையை பறித்து, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையை அம்மாநில அரசு வழங்கியுள்ளது. முன்னதாக விளையாட்டுத் துறையை கையாண்ட தத்தத்ராயா பார்னே வேளாண் துறையை நிர்வகிப்பார் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக விவசாயிகளை பிச்சைக்காரர்களுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். அதனை தொடர்ந்து, ஜூலை 20ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா பிரிவுத் தலைவர் சுனில் தட்கரா லத்தூரில் உள்ள ஓய்வு இல்லத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பின் போது சில பேர் உள்ளே நுழைந்து இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள், அகில இந்திய சாவா சங்கத்னாவின் மாநிலத் தலைவர் விஜய்குமார் காட்கேவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து மாணிக்ராவ் கோகடே பதவி விலக் கோரி போராட்டக்காரர்கள் சீட்டுக்கட்டுகளை அரங்கில் வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.