speeches at the Virudhunagar DMK youth wing stage
திமுக இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி அருகிலுள்ள கலைஞர் திடலில் மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்கம் தென்னரசு வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/07/sta-2026-02-07-22-51-05.jpg)
முக்கியமாக கலந்து கொண்டவர்களில் திமுக முதன்மை செயலாளர் கே. என். நேரு, துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, நாடாளுமன்றக் குழுத் தலைவரும் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் வருவாய்த்துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மக்களவை குழுத் தலைவரும் திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு, துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஐ. பெரியசாமி, திருச்சி சிவா எம்பி, அ. ராஜா எம்பி, துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான அந்தியூர் செல்வராஜ், துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மு.பெ. சாமிநாதன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் இருந்தனர். மேலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆர். சக்கரபாணி, பி. மூர்த்தி, கே.ஆர். பெரியகருப்பன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் மற்றும் பல்வேறு மாவட்ட திமுக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த சந்திப்பு தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்திய முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இந்நிகழ்வில் திருச்சி சிவா எம்.பி பேசும்போது, “கருந்தலைகள் போல இந்தக் கூட்டம் காட்சியளிக்கிறது. சிவகாசி பகுதியில் ஏராளமான தீப்பெட்டி ஆலைகள் உள்ளன; அங்கு தீக்குச்சிகளை காயவைத்து வரிசையாக அடுக்கி வைப்பார்கள். அதைப் போன்ற தோற்றம் இங்கு தெரிகிறது. இதைப் பற்றி நமது தலைவர் கலைஞர் முன்பே குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களை தீக்குச்சிகளுடன் ஒப்பிட்டது மிகவும் பொருத்தமானது. நீங்கள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தீப்பெட்டிக்குள் பாதுகாப்பாக இருக்கும் தீக்குச்சிகள். வீடு, ஊர் எரியச் செய்யும் தீக்குச்சிகள் அல்ல; நாட்டை சூழ்ந்திருக்கும் இருளை அகற்றும் ஒளிக்குச்சிகள்” என்று அவர் சுட்டிக்காட்டினார். அதனை தொடர்ந்து, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, “தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தத் தேர்தல் வந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும். திராவிட மாடல் ஆட்சியின் முகமாக முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் 5 இலட்சம் இளைஞர்களை நிர்வாகத் திறன் கொண்டவர்களாக உருவாக்கியவர் துணை முதல்வர். முதலமைச்சர் தலைமையில் தமிழகம் தன்னம்பிக்கையுடன் முன்னேறுகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
கனிமொழி எம்.பி பேசும்போது, “தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதியை வழங்க ஒன்றிய அரசு தொடர்ந்து தயக்கம் காட்டுகிறது. 100 நாள் வேலைத்திட்டம் மூலம் கிராமப்புற மக்கள் பயன் பெற்றனர்; அந்தத் திட்டத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் பாஜக பட்ஜெட் வடிவமைத்துள்ளது. இத்தகைய அணுகுமுறையுள்ள கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. தமிழகத்திற்கு தேவையான நிதி முறையாக வழங்கப்படவில்லை. அமெரிக்க அதிபருடன் ஒப்பந்தம் செய்ததாக பிரதமர் தெரிவிக்கிறார். அமெரிக்கப் பொருட்களுக்கு வரி இல்லை, ஆனால் நமது பொருட்கள் அங்கு சென்றால் வரி விதிக்கப்படுகிறது. இதனால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும், விவசாயத்திற்கும் கடும் தாக்கம் ஏற்படும். குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும். ஆனால் அவர் அவையில் பங்கேற்கவில்லை. அவைத் தலைவர் கூட பிரதமர் வரமாட்டார் என்று கூறினார். பாஜக ஆட்சிக்காலத்தில்தான் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நடைமுறை புறக்கணிக்கப்பட்து. தன்னை விஸ்வகுரு என கூறிக்கொள்கிறார். ஆனால், எதிர்கட்சி பெண் உறுப்பினர்களுக்கு பயந்து கொண்டு நாடாளுமன்றத்திற்கு வரவில்லையென சபாநாயகர் தெரிவிக்கிறார்” என்றார்.
இதனையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “இது ஒரு சாதாரண நிர்வாகிகள் சந்திப்பா, இல்லையெனில் வெற்றியை முன்னறிவிக்கும் மாநாடா என்ற அளவுக்கு உற்சாகத்துடன் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்குக் காரணமான இருவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். தமிழகம் முழுவதும் பட்டா வழங்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் நிதி ஒதுக்கீட்டில் முன்னிலை வகிக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு. விருதுநகர் மாவட்டம், ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய மருதுசகோதரர்கள், எளிமையின் சின்னமாக இருந்த காமராஜர், தியாகி சங்கரலிங்கனார், ஏவிபி ஆசைத்தம்பி, தங்கப்பாண்டியன் போன்ற வீரர்களை தந்த மண். தங்கப்பாண்டியன் இளைஞரணி வளர்ச்சிக்கு பல உதவிகள் செய்தவர். இன்று அவரது வழியில் அமைச்சர் தங்கம் தென்னரசுவும் இளைஞரணிக்குத் துணைநின்று வருகிறார். நமது இளைஞரணி ஒழுங்கும் ஒற்றுமையும் கொண்ட அமைப்பாக, தலைவரின் வழிகாட்டுதலை துல்லியமாக செயல்படுத்தும் சக்தியாக உள்ளது. கொரோனா காலத்தில் உதவி மையங்கள் மூலம் பல சமூகப் பணிகளை செய்தோம். 75 ஆண்டுகளாக திமுக அதே உறுதியுடன் மக்களிடையே செயல்பட்டு வருகிறது. 1976ல் இளைஞராக இருந்த நம் தலைவர் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். அங்கிருந்து மேலும் மனவலிமையுடன் வெளியே வந்தார். இன்று வரை பாசிசத்துக்கு எதிராக துணிவுடன் நிற்பதைப் பார்த்து சிலருக்கு எரிச்சல் ஏற்படுகிறது.​ இனி பிரதமர் அடிக்கடி தமிழகத்திற்கு வருவார், திருக்குறள் பேசுவார் . ஏனெனில் தேர்தல் நெருங்குகிறது. டபுள் என்ஜின் ஆட்சி தேவை என்கிறார்கள், ஆனால் இந்த சிங்கிள் என்ஜின் ஆட்சிதான் 11.1% வளர்ச்சியை பெற்றுத்தந்தது. அவர்கள் ஆளும் உத்திரப்பிரதேசம் 6% வளர்ச்சியையும் எட்டவில்லை. தேர்தல் என்பது ஜனநாயகத் திருவிழா. திருவிழாவில் ஏமாற்றுபவர்கள் இருப்பது போல, விசாரணை அமைப்புகளின் பெயரில் அச்சுறுத்தும் சக்திகளும் வருகின்றன. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு உரிய திட்டங்களை வழங்கவில்லை. ஆனால் சிலர் அடிமைத்தனமாக நடந்து கொள்கிறார்கள். நம் தலைவர் கண் சைகை செய்தாலே இளைஞரணி பணிகளை நிறைவேற்றும். பேரறிஞர் அண்ணா சொன்னது போல மக்களிடம் சென்று, மக்களோடு வாழ்ந்து, மக்களிடமிருந்து கற்றுக் கொண்டு நமது சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, “இந்த மாதத்தில் மேலும் ஐந்து மாநாடுகள் நடைபெற உள்ளன. விருதுநகர் என்றாலே காமராஜர் மற்றும் அவரது மதிய உணவுத் திட்டம் நினைவிற்கு வரும். திராவிட மாடல் ஆட்சி என்றால் இன்று காலை உணவுத் திட்டம் நினைவிற்கு வருகிறது. 2004ல் இங்கு தென் மண்டல மாநாடு நடத்தியபோது 40க்கு 40 வெற்றி பெற்றோம். 2019ல் இங்கிருந்து தேர்தல் பிரச்சாரம் தொடங்கி 39 தொகுதிகளில் வெற்றி கண்டோம். 2021ல் சட்டமன்றத்தில் ஆட்சி அமைத்தோம்; 2023ல் மீண்டும் மக்களின் ஆதரவு கிடைத்தது. 2026ல் புதிய சாதனை படைக்க உள்ளோம். 200 தொகுதிகளில் வெற்றி எங்கள் இலக்கு. உங்களைப் பார்க்கும் போது அந்த நம்பிக்கை அதிகரிக்கிறது. நான் இளைஞரணி செயலாளராக இருந்தபோது விருதுநகர் மாவட்டத்தில் சென்றிராத கிராமம் இல்லை. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மாநிலம் முழுவதும் 22 இலட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு எந்தத் துறையிலும் தனித்துவமான செயல்திறன் காட்டுபவர். இவர்கள் இணைந்து இந்த மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுகின்றனர்; அனைவரும் இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். உதயநிதி இளைஞர்களை பெயருக்காகச் சேர்ப்பதில்லை, கொள்கை பற்றுள்ளவர்களாக உருவாக்குகிறார். நமது கொள்கைகள் - சமூகநீதி, மாநில சுயாட்சி, சுயமரியாதை, மொழி மற்றும் இன உணர்வு. மும்மொழிக் கொள்கை பெயரில் இந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர். மொழியை பலவீனப்படுத்தினால் இனத்தையும் பாதிக்கலாம் என்ற எண்ணமே அதற்கு பின்னால் உள்ளது. அதற்கு எதிராக நாம் உறுதியாக நிற்கிறோம்.​ ஒரு காலத்தில் கல்வி, வேலை வாய்ப்பு எட்டாதவையாக இருந்தன; போராடி அதை மாற்றினோம். இப்போது நீட் போன்ற முறைகள் மூலம் பழைய தடைகளை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கின்றனர். மாநிலக் கட்சிகளை பலவீனப்படுத்தி, மாநிலங்களை அதிகாரமற்ற அமைப்புகளாக மாற்றும் முயற்சியும் நடக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/07/stavi-2026-02-07-22-50-16.jpg)
இளைஞர்கள் அதிகம் படிக்க வேண்டும்; சமூக வலைதளங்களில் சிந்தனையுடன் எழுத வேண்டும்; சிறு கூட்டங்கள் மூலம் கொள்கைகளை பரப்ப வேண்டும். தேர்தல் வரும்போது கடைசி நிமிடம் வரை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட வேண்டும். ஒன்றிய அரசின் விருதுகள் பல துறைகளில் தமிழகத்திற்கே கிடைக்கின்றன. ஆனால் பட்ஜெட்டில் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு இல்லை. கல்வி, மெட்ரோ, எய்ம்ஸ், விமான நிலையம், வரி பங்கு எதற்காக கேட்டாலும் பதில் இல்லை. அதற்கு மக்கள் தேர்தலில் தக்க பதில் அளிப்பார்கள். 100 நாள் வேலைத்திட்டம் குறைக்கப்பட்ட நிலையில் கூட மாநில அரசு மக்கள் நலனை காப்பாற்ற முயல்கிறது. பெண்களுக்கான உரிமைத்தொகை, விடியல் பயணம், நான் முதல்வன், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், அடிப்படை வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இந்தத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் என்.டி.ஏ இடையிலான அரசியல் நேர்காணல். பாஜகவுக்கு தோல்வி புதியதல்ல; இந்த முறை அதிமுக–பாஜக கூட்டணி கடும் தோல்வி சந்திக்கும். அதைவிட பெரிய வெற்றி திமுக அணிக்கு கிடைக்கும். வளர்ந்த தமிழ்நாட்டை மேலும் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக மாற்றி, ஜனநாயகப் போராட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடிப்போம்” என்று அவர் குறிப்பிட்டார்.
Follow Us