Special police officer arrested for harassing a 17-year-old girl Photograph: (KALLAKURICHY)
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் கரியாலூர் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் பிரபு என்பவர் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து வருகிறார். கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக, பெட்டிக்கடை உரிமையாளர் ஒருவரை போலீசார் அண்மையில் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், அந்த பெட்டிக்கடைக்குச் சென்ற தனிப்பிரிவு காவலர் பிரபு, அங்கு தனிமையில் இருந்த பெட்டிக்கடை உரிமையாளரின் 17 வயதான பெண்ணிடம், சிறிது நேரம் என்னிடம் நீ தனிமையில் இருந்தால் உன் தந்தை மீது இருக்கும் வழக்கை விடுவிக்க முயற்சி எடுப்பதாகவும், உனக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் எனவும் ஆசைவார்த்தைக் கூறி, அந்தப் பெண்ணை பாலியல் தேவைக்கு பயன்படுத்த முயன்றுள்ளார். அப்போது சுதாரித்துக்கொண்ட அந்தப் பெண், உடனே அவரை கீழே தள்ளிவிட்டு கதறி அழுததாகவும் தெரிய வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு, விழுப்புரம் சென்று தன் மகளுக்கு நேர்ந்த கொடுமையை எடுத்துக்கூறி, தன் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனிப்பிரிவு காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் உமாவிடம் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து, கடந்த இரண்டு நாட்களாக தனிப்பிரிவு காவலர் பிரபுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து புகார் உண்மை என தெரிய வந்த காரணத்தினால் தனிப்பிரிவு காவலர் பிரபுவை கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆசிரியர் படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து நீதிபதி அவரை வரும் 26 ஆம் தேதி வரை கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளார்.
வேலியே பயிரை மேய்ந்த கதை போல, மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவலரே இப்படி, 17 வயது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம், மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.