கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்.பி. விமலா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. 

Advertisment

அதன்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் எனப் பலர் இடம் பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த குழுவினர் கடந்த சில நாட்களாகக் கரூர் பகுதியில் முகாமிட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொருபுறம், தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. 

Advertisment

இத்தகைய சூழலில் தான் கரூர் பிரச்சார கூட்டத்திற்கான பொறுப்பாளராகச் செயல்பட்ட சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபனிடம் விசாரணை நடத்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சம்மன் அனுப்பினர். இந்நிலையில் பார்த்திபன் கரூரில் விசாரணைக்கு இன்று (11.10.2025) ஆஜராகியுள்ளார். மேலும் இந்த பரப்புரை நிகழ்ச்சிக்காக சவுண்ட் சர்வீஸ் அமைத்துக் கொடுத்த ஆடியோ இன்ஜினியர்களிடமும் சிறப்புப் புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.