ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ரூ.10.80 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Advertisment

அப்போது அவர் கூறியதாவது:ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கோணவாய்க்கால் பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தல் வழக்கில், ஏ.டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை கடத்தப்பட்ட அன்று இரவு 12:30 முதல் 1 மணிக்குள் அப்பகுதியைக் கடந்த 120 வாகனங்களின் எண்களைக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டலத்தில் 8 மாவட்டங்களில் இதுபோன்ற வழக்குகளில் தொடர்புடைய 41 குற்றவாளிகளை விசாரணை மேற்கொண்டதில் கிடைத்த துப்பு அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அப்பகுதியின் நுழைந்த மற்றும் வெளியேறிய என 33 பகுதிகளில் உள்ள 120 சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைக் கண்காணித்து வருகின்றனர். உள்ளூரில் குழந்தைகள் இல்லாதவர்கள் மற்றும் குழந்தை கடத்தல் வழக்கில் ஈடுபட்டவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற ரீதியிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை திருநெல்வேலி சென்றுள்ளது. சம்பவ இடத்தில் சி.சி.டி.வி. கேமரா இல்லாததும், இருட்டாக இருப்பதாலும் இவ்வழக்கில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் கர்நாடகாவில் இதுதொடர்பாக தகவல்களைப் பெற்றுள்ளோம். இனி அங்கும் சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளோம். மேற்கு மண்டலத்தில் 8 மாவட்டங்களில் 24 குழந்தை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய இடைத்தரகர்களையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

சித்தோடு அருகே சேலம்-கொச்சின் நெடுஞ்சாலையில் கோணவாய்க்கால் பகுதியில், மேம்பாலத்தின் கீழே ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட வெங்கடேஷ்-கீர்த்தனா தம்பதியினரின் ஒன்றரை வயது பெண் குழந்தை வந்தனா, கடந்த 15-ம் தேதி (அக்டோபர் 15, 2025) நள்ளிரவு கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment