சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் பெண்களுக்கு இலவசமாக மார்பகப் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன் கலந்துகொண்டு முகாமைத் துவக்கி வைத்து, “தற்போதைய சூழ்நிலையில் வயதுக்கு வந்த அனைத்துப் பெண்களும் மார்பகப் புற்றுநோய் குறித்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதனைக் காலதாமதமாகக் கண்டறிந்தால் ஆபத்து ஏற்படும். புற்றுநோயைத் தடுக்க நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அனைத்துப் பெண்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் மண்டல துணை ஆளுநர் புகழேந்தி, திட்டத் தலைவர் தீபக்குமார் மற்றும் மூத்த உறுப்பினரும், மார்பகப் புற்றுநோய் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் பிரேமா, மகளிர் மருத்துவ சிறப்பு நிபுணர் அங்கிதா சிங் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளைப் பரிசோதனை செய்தனர். இதில் 61 பயனாளிகள் பரிசோதனை செய்துகொண்டு பயன்பெற்றனர். சிதம்பரம் அரசு மகளிர் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் சென்ட்ரல் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.