'Special barriers to prevent fans from boarding' - Vijay's campaign vehicle ready Photograph: (tvk vijay)
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை (13.09.2025 - சனிக்கிழமை) அன்று திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காகத் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே விஜய் பேசுவதற்கு தவெகவினர் அனுமதி கேட்டிருந்த நிலையில் போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர்.
அதனைத் தொடர்ந்து காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி காவல்துறையினரிடம் தவெகவினர் கடிதம் கொடுத்தனர். ஆனால் அந்த இடத்திலும் விஜய் பேச அனுமதி அளிக்க காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர். இறுதியாக திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதே சமயம் 23 நிபந்தனைகளை போலீசார் விஜய்க்கு விதித்துள்ளனர்.
ரோட் ஷோ நடத்தக்கூடாது, அதிகப்படியான வாகனங்கள் பின் தொடர்ந்து வரக்கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது, ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும், அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது, விஜய் வாகனத்தில் அமர்ந்தவாறு தான் செல்ல வேண்டும். பிரச்சாரம் நிறைவுபெறும் பகுதியான மரக்கடை பகுதியில் 20 முதல் 30 நிமிடம் வரை விஜய் பேசலாம் உள்ளிட்ட 23 நிபந்தனைகளை விதித்து காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். காவல்துறையின் இந்த 23 நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்வதாக தவெக கட்சியினர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
நாளை திருச்சியில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பிரத்யேக பிரச்சார வாகனம் தயாராகியுள்ளது. அக்கட்சியின் கொடியின் வண்ணத்தில் வாகனம் அமைந்துள்ளது. 'உங்க விஜய் வரேன் நான்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த பிரச்சார வாகனத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள், தொண்டர்கள் வாகனத்தின் மீது ஏறாத வகையில் மேற்கூரை சுற்றி இரும்பாலான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.