சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் நேற்று (14.10.2025) காலை 09:30 மணிக்குச் சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் நாளை மறுநாள் வரை (17.10.2025) வரை நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் தான் இன்று (15.10.2025) 2வது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு இன்று கைகளில் கருப்பு பட்டை (பேட்ஜ்) அணிந்து வந்தனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கிட்னி திருட்டு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ். கிருஷ்ணமூர்த்தியைப் பேச அனுமதித்தார். அதனைத் தொடர்ந்து அக்ரி எஸ். கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதியில் இருக்கின்ற போளூர் கிளைச் சிறைச்சாலை ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இந்த சிறைச்சாலையில் போதிய இடவசதி இல்லை. மேலும் பழுதடைந்திருக்கிறது. அரசு உடனடியாக இந்த போளூர் கிளைச் சிறைச்சாலையைப் பழுது பார்த்து கைதிகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தித் தருமா? என தங்கள் மூலமாக அறிய விரும்புகிறேன்” எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு, “கருப்பு பட்டை கட்ட உடனே எல்லாருக்குமா ஒன்று போல பிபி கூடியிருச்சோ என்று நினைத்தேன்” எனக் கேட்டார். அதனால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது. அதே சமயம் அமைச்சர் ரகுபதி எழுந்து பேசுகையில், “அதைப் பற்றி நான் சொல்கிறேன். சிறைகளிலே இருக்கக்கூடிய சிறைவாசிகளுக்கு ஒரு அடையாளம் கொடுப்பார்கள். அதைப்போல இன்றைக்குத் தனி அடையாளத்தோடு நம்முடைய (அதிமுக) உறுப்பினர்கள் சிலர் இங்கே வந்திருக்கிறார்கள் என்று எண்ணுகின்றேன். அதனால் அவர்களைப் பற்றி நான் தவறாகச் சொல்லவில்லை” எனப் பேசினார்.