கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

Advertisment

அதன்படி, வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை சேகரித்த சிபிஐ அதிகாரிகள், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர், காவல் துறையினர் மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் ஆட்சியர், கரூர் எஸ்.பி ஆகியோரிடம் கடந்த டிசம்பர் மாதம் 29 மற்றும் 30 என இரண்டு நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

Advertisment

அதனை தொடர்ந்து, கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வருகிற ஜனவரி 12ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் இன்று (08-01-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சபாநாயகர் அப்பாவுவிடம், விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் வழங்காதது குறித்து கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விஜய்க்கு சம்மன் அனுப்பியது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.

Advertisment

அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “கரூரில் 41 பேர் இறந்த போது தமிழக அரசு ஒரு விசாரணை குழுவை அமைத்தார்கள். விசாரணை தொடங்குவதற்கு முன்பே, தன்னை கைது செய்து பாருங்கள் என்று விஜய் வீர வசனம் பேசினார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை, விசாரணைக்கு அழைக்கவில்லை. அப்படி இருக்கும் போது அந்த வார்த்தையை அவர் பயன்படுத்தினார். இப்போது சிபிஐ, நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அந்த வசனத்தை அவர் பயன்படுத்துவாரா?. இல்லை பா.ஜ.கவுடன் இணைந்து இப்படியொரு நாடகம் நடத்துகிறார்களா? ஆந்திராவில் ஒரு சினிமா நடிகர் சென்ற போது ஒரு பெண் இறந்தார். அப்போது அந்த நடிகரை கைது செய்தார்கள். 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். தணிக்கை செய்வதற்கு அனுமதி கொடுப்பது மத்திய அரசா? மாநில அரசா?. அவரின் கடைசி படம் என்பதால் பில்டப் செய்வதற்காக படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்குமா? கிடைக்காதா? என தொண்டர்களை கொதி நிலையில் வைப்பதற்காக இந்த நாடகத்தை நடத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்” என்று கூறினார்.