தமிழகச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் தமிழக சட்டப்பேரவையின், 2026ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைக் காரணம் காட்டி, உரை நிகழ்த்தாமல் ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார்.
இதனையடுத்து இக்கூட்டத்தொடர் ஜனவரி 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் 17ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் எனச் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 26 (1) கீழ் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி காலை 09:30 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை வளாகத்தில் கூட்டியுள்ளேன்.
அன்றையத்தினம் 2026 - 27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். மேலும் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் நாள் பேரவை விதி 193 (1) கீழ் என்னுடைய அறையில் என் தலைமையில் கூடி அனைத்து கட்சித் தலைவர்களும் வருகை தந்து கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்த வேண்டும் என முடிவெடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
Follow Us