தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையைக் கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாதக, தவெக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் எஸ்.ஐ.ஆர் பணியை எதிர்த்து கடந்த 16ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், எஸ்.ஐ.ஆரை எதிர்த்து தவெக நடத்திய போராட்டம் வெறும் கண் துடைப்பு தான் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து விஜய்யை விமர்சித்துள்ளார். வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளை முன்னிட்டு நெல்லையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “விஜய் எஸ்.ஐ.ஆரை எதிர்த்து போராடினாரா? இல்லை திமுகவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினாரா?. எஸ்.ஐ.ஆரை எதிர்த்து போராட வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்திருக்க வேண்டும்.
அவர் மாநிலத்தில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துவிட்டு மாநில அரசை எதிர்த்து போராடினார் என்றால் அந்த போராட்டம் கண் துடைப்பு போராட்டம் தான். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை மனதில் வைத்து கொண்டு, நானும் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக போராடுகிறேன் என்று வெளியே பேசுவதை மக்கள் நம்பவில்லை. எஸ்.ஐ.ஆரை எதிர்த்து போராட்டம் என்ற போர்வையில் தமிழக அரசை விமர்சனம் செய்தார்களே தவிர எஸ்.ஐ.ஆருக்கு விரோதமாக எந்த வார்த்தையும் பயன்படுத்தவில்லை” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/18/vijayappavu-2025-11-18-19-19-47.jpg)