கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். அப்போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாகத் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 6 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு தொடர்பாக மத்திய அரசின் அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று (13.10.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கூறி விண்ணப்பித்த போது, தமிழில் உள்ள ஆவணங்கள் மொழிபெயர்த்து அனுப்பக் கோரி விண்ணப்பத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் தெரிவித்தார்.
மேலும், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஆவணங்கள் மொழிபெயர்ப்பு பணிக்குக் கூடுதல் மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க 30 லட்சம் ரூபாய் ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பணிகளை முடித்து மத்திய அரசு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்தார். மேலும், “அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் எதுவுமே நகர்வதில்லை. ஆனால் மற்றவர்கள் மீதான வழக்கில் வந்தே பாரத் ரயில் போல வேகம் உள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில் தனக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என முன்னாள் அமைச்சர் கூறக்கூடும். மக்கள் நம்பிக்கை பெற அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரமாகக் கருத வேண்டும். நடைமுறைகளுக்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டால் வழக்கு தனது வலுவை இழந்துவிடும். அதோடு வழக்கை அனைவரும் மறந்து விடக்கூடும். மேலும் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அவகாசம் வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் நவம்பர் மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/13/sp-velumani-hc-2025-10-13-19-21-32.jpg)