வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள பீஞ்சமந்தை மலைகிராமத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் கலந்துகொண்டு பேசினார்.

Advertisment

அப்போது அவர், “பெற்றோர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குழந்தைகள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மலைகிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் போலீஸ் வேலைக்கு நல்ல தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இவர்கள் படித்து ஆர்வத்துடன் வேலைக்குச் செல்ல வேண்டும். விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்கள் என்ன தேவைகள் என்றாலும் தயங்காமல் கேட்கலாம். கடந்த 3 மாதங்களில் மட்டும் 9 மலைகிராம மாணவர்கள் புதிதாகப் போலீஸ் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் அதிகமானோர் அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும். அதற்கு நன்றாகப் படிக்க வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும், பள்ளிகளில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள், சான்றிதழ்கள் பெற வேண்டும்” என ஊக்கப்படுத்திப் பேசினார்.

Advertisment

மேலும், மலைகிராம மக்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.25,000 நன்கொடையாக அளித்தார். அதேபோல் மாநில அளவில் விளையாட்டில் பங்கேற்று 24 பதக்கங்கள் வென்ற 150 மாணவர்களுக்கு இலவச விளையாட்டு ஆடைகள், சான்றிதழ்கள், கேடயங்கள், பதக்கங்கள் வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மலைகிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு உணவு வழங்கியதோடு, அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டது மலைவாழ் மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது.

மலைவாழ் மக்களைப் பண ஆசை காட்டியும் நல்ல வேலை எனக் கூறியும் ஆந்திராவைச் சார்ந்த கடத்தல் கும்பல்கள் ஜவ்வாது மலையின் மலைவாழ் மக்களைச் செம்மரம் வெட்ட அழைத்துச் செல்கின்றன. அதேபோல் மலையில் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்கின்றனர். இதுகுறித்த தகவல்கள் காவல்துறைக்குச் சரியாகக் கிடைப்பதில்லை. இதனாலேயே அதனைத் தடுக்க முடியாமல் காவல்துறை தடுமாறுகிறது. அவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுச் சிக்கும்போது குடும்பமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் பிள்ளைகளின் கல்வி, வேலை வாய்ப்புகளில் பெரும் சிக்கல்கள் உருவாகின்றன. எனவே, பெற்றோர்கள் குற்றம் செய்தால் அல்லது குற்றத்துக்கு துணை போனால் உடனே காவல்துறைக்குத் தெரிவியுங்கள் என மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

Advertisment